பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர், அனல் அரசு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் முன்னணி ஹீரோ படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
விஜய் சேதுபதி மகன் சூர்யாவை ‘பீனிக்ஸ்[வீழான்]’படம் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் இவர், அந்தப் படத்தைத் தயாரித்து இயக்குகிறார். ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்துக்கு அவர் சண்டை பயிற்சி அளித்திருந்தார்.
இந்தப் படம், ஆஸ்கர் விருது போல, திரைப்பட சண்டைப் பயிற்சி துறைக்கான ‘டாரஸ் வேர்ல்ட் ஸ்டன்ட் விருது’க்கான(Taurus World Stunt Awards) பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
மிஷன்: இம்பாசிபிள்-டெட் ரெக்கனிங் போன்ற ஹாலிவுட் படங்களுடன் ‘ஜவான்’ படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவுக்காக அவர் நேற்று அமெரிக்கா சென்றார்.
முன்னதாக அவர் கூறும்போது, “இந்த விருது, விலை மதிப்பற்ற தலைசிறந்த ஒன்று. அது கிடைத்தால் பெரிய விஷயமாக இருக்கும்.
ஷாருக்கான், வருண் தவான், ஷாஹித் கபூர், அட்லி உட்பட முன்னணித் திரைக்கலைஞர்கள் இதற்காக எனக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இப்போது, ‘இந்தியன்-2’, ‘வா வாத்தியாரே’, இந்தியில் ‘பேபி ஜான்’, ‘வார்-2’ படங்களில் பணியாற்றி வருகிறேன்” என்றார்.