விசா கட்டணம் அதிகரிக்க பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டபோதும் வீ,எப்.எஸ். சேவை கட்டணத்துக்கு பாராளுமன்றத்தின் அனுமதி இல்லை. சட்டவிரோதமான முறையிலேயே வீ,எப்.எஸ். கட்டண அதிகரிப்பு பிரேரணை நுளைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை பிழையாக வழிநடத்தப்பட்டிருப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
வெளிநாடுகளில் இருந்து வரும் ஒருவரிடமிருந்து அறவிடப்படும் விசா கட்டணத்தை அதிகரிக்க பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் வீ.எப்.எஸ். என மேலதிகமாக 20, 21 டொலர் அறவிடப்படுகிறது. இதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்படவில்லை. அவ்வாறு அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என்றால் அதனை தனியாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்க வேண்டும்.
ஆனால் விசா கட்டண அதிகரிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையுடன் சட்ட விரோதமான முறையில் இணைத்து இதனை அனுமதித்துக்கொண்டுள்ளது. அதனால் பாராளுமன்றத்தை பிழையாக வழிநடத்தியமைக்காக நிலையியற் கட்டளையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரம் சேவை கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானித்து அனுமதிக்கப்பட்டதாகவும் அதனால் அதனை பாராளுமன்றத்தில் அனுமதிக்க தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவிப்பது பிழையான விடயமாகும். நிதி தொடர்பான அதிகாரம் இருப்பது பாராளுமன்றத்துக்காகும். அதனால் இந்த சேவை கட்டணத்தை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தின் அனுமது பெறவேண்டும்.
மேலும் ஒரு சுற்றுலா பயணியிடமிருந்து வீ.எப்.எஸ் கட்டணமாக 18.50 டொலர் அறவிடப்படுகிறது. இந்த பணம் அரசாங்கத்துக்கு கிடைப்பதில்லை. மாறாக வீ.எப்.எஸ். நிறுவனத்துக்கே செல்கிறது. வருத்துக்கு 2மில்லியன் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர்.
அதன் பிரகாரம் 40 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெறுகிறது. அதனால் அரசாங்கம் இவ்வாறானதொரு திர்மானம் எடுத்திருப்பது எதிர்வரும் தேர்தல் வேலைத்திட்டத்துக்கு இந்த பயணத்தை பயன்படுத்துவதற்காக என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே பாராளுமன்றத்தை பிழையாக வழிநடத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தொடர்பாக நிலையிற் கட்டளைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.