திரை விமர்சனம்: ரசவாதி

கொடைக்கானலில் சித்த மருத்துவராகவும் இயற்கை ஆர்வலராகவும் வாழ்ந்துவருகிறார் சதாசிவ பாண்டியன் (அர்ஜுன் தாஸ்).

அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றும் சூர்யாவுக்கும் (தான்யா ரவிச்சந்திரன்) அவருக்கும் காதல். காவல் துறை ஆய்வாளர் பரசுராஜ் (சுஜித் சங்கர்), தன் வாழ்க்கை சீரழிந்ததற்கு சதாசிவமே காரணம் என்று கூறி அவர்கள் காதலைப் பிரிக்க முயல்கிறார்.

சதாசிவத்துக்கும் பரசுவுக்குமான முன்பகை என்ன? பரசுவின் வன்மத்தில் இருந்து காதலர்கள் தப்பித்தார்களா என்பது மீதிக் கதை.

‘மவுனகுரு’ (2011), ‘மகாமுனி’ (2019) என பாராட்டைப் பெற்ற படங்களைக் கொடுத்த இயக்குநர் சாந்தகுமாரின் 3-வது படம் இது.

ஒரு நல்லவனுக்கும் சைக்கோ காவல் அதிகாரிக்கும் இடையிலான மோதல் என்னும் வழக்கமான கதைக் களத்தை எடுத்துக்கொண்டு அதை மாறுபட்ட அனுபவமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்.

முதன்மைக் கதாபாத்திரங்களை வித்தியாசமான பின்னணியுடன் வடிவமைத்திருப்பது திரைக்கதைக்கு சுவாரஸியம் சேர்த்துள்ளது. கொடைக்கானலைக் கதைக் களமாகக் கொண்டதும் இதமான காட்சி அனுபவத்தைத் தருகிறது.

சித்த மருத்துவம், மரம், மலை, யானை உள்ளிட்ட காட்டுயிர்கள் என இயற்கையைப் பேணுவது தொடர்பான காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன.

சதாசிவத்துக்கும் சூர்யாவுக்கும் காதல் மலரும் காட்சிகளும் இயல்பாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் அமைந்துள்ளன.

இரண்டாம் பாதியில் அழகான காதல், மலையைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என சதாசிவத்தின் முன் கதையில், கவனத்தை தக்கவைக்கும் அம்சங்கள் இருந்தாலும், நாயகன் தன்னை அறியாமல் செய்த கொலைக்கு ஆயுள் தண்டனை கிடைப்பது,

அதனால் அவன் காதல் கைகூடாமல் போவது என தர்க்கரீதியான பிழைகள் துருத்தி நிற்கின்றன. அதற்குப் பிறகு வரும் காட்சிகள் பழகிய பாதையில் பயணிப்பதால் அலுப்பு அதிகரிக்கிறது.

படத்தின் முடிவையும் யூகித்துவிட முடிவதால் பரபரப்பாக நகர்ந்திருக்க வேண்டிய கடைசி அரை மணி நேரம் நமுத்துப்போன அப்பளமாக ‘சவசவ’ என்றாகிவிட்டது. சாந்தகுமாரின் ஆழமான, அழுத்தமான வசனங்களை, பல இடங்களில் ரசிக்க முடிகிறது.

கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் அர்ஜுன் தாஸ். தான்யா ரவிச்சந்திரன் அழகாக இருப்பதோடு நடிப்பிலும் குறைவைக்கவில்லை. உளவியல் சிக்கலும் வன்மமும் நிறைந்த வில்லன் கதாபாத்திரத்தில் சுஜித் சங்கர் சிறப்பாக நடித்துள்ளார்.

ஃப்ளாஷ்பேக் பகுதியில் நாயகனின் காதலியாக வரும் ரேஷ்மா வெங்கடேஷ், நண்பனாக ரிஷிகாந்த், வில்லனிடம் மாட்டிக்கொள்ளும் உளவியல் மருத்துவராக விஜே ரம்யா, காவல்துறை துணை ஆய்வாளராக ஜி.எம். சுந்தர் ஆகியோர் குறையற்ற நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

தமனின் பாடல்கள் மோசமில்லை. பின்னணி இசை, காட்சிகளின் தாக்கத்தை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது. சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவு கொடைக்கானலின் குளுமையை உணர வைக்கிறது.

சுவாரஸியமான கதாபாத்திரங்கள், தேர்ந்த நடிப்பு, மேம்பட்ட உருவாக்கம் என ரசிக்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், இரண்டாம் பாதித் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நிறைவளித்திருப் பான் இந்த ‘ரசவாதி’.

Related posts