திரையுலகில் யாரையும் வசைபாட வேண்டியதில்லை கமல்

“நம் குடும்பம் சிறியது. இதில் பல விவாதங்கள் வரும், சிக்கல்கள் வரும். எதிரும் புதிருமாக பேச வேண்டியிருக்கும். அதற்காக யாரையும் அதிகமாக திட்டி, வசைபாட வேண்டும் என்பதில்லை” என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிறுவனரும், திரை உலகின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான மறைந்த டி.இராமானுஜத்தின் நூற்றாண்டு விழா சென்னை, மயிலாப்பூரில் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் பாக்யராஜ், நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய கமல்ஹாசன், “இது ஒரு குடும்ப விழா. என்னை அழைக்கவில்லை என்றாலும் கலந்து கொள்வேன். நம் குடும்பம் சிறியது. இதில் பல விவாதங்கள் வரும், சிக்கல்கள் வரும். எதிரும் புதிருமாக பேச வேண்டியிருக்கும். அதற்காக யாரையும் அதிகமாக திட்டி, வசைபாட வேண்டும் என்பதில்லை.

டி.இராமானுஜத்தை திரையுலகின் தந்தை என்று சொல்வது பொருத்தமானது. இவருக்கு விழா எடுக்க யார் யாருக்கு எல்லாம் எண்ணம் தோன்றியதோ, அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி” என்றார்.

முன்னதாக இயக்குநரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி, கமல் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார்.

அதில் ‘உத்த மவில்லன்’ பட நஷ்டத்துக்காக மற்றொரு படத்தில் கமல் நடித்து கொடுக்கிறேன் என சொல்லி பல வருடமாகியும் படம் பண்ணவில்லை என்று தெரிவித்திருந்தார்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது ‘திரையுலகில் வசைபாட வேண்டாம்’ என்ற கமலின் மேற்கண்ட பேச்சு லிங்குசாமிக்கு சொல்லும் சூசகமான கருத்து என பலரும் கூறி வருகின்றனர்.

Related posts