படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (18) தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் போராட்ட இல்லத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 2,645 ஆவது நாளாக போராடி வரும் உறவுகள், இனப்படுகொலைக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கண்ணீர்மல்க தமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தினர்.

——-
முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

சேவைச்சத்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

——

தமிழர்களின் கூட்டுத் துன்பங்களும் பாரிய படுகொலைகளும் இனப்படுகொலையாக சர்வதேச சமூகத்தினாலோ அல்லது தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களினாலோ இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தையும் இலங்கை அரசாங்கத்தையும் வடகிழக்கு மாகாண தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழின இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (18) வடகிழக்கில் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் தமிழின இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் பல்வேறு இடங்களிலும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இதன் பிரதான நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு காந்திபூங்காவில் பெருமெழுச்சியாக நடைபெற்றது.

சமூகம் சார்ந்த அமைப்புகள், பெண்கள் சங்கங்கள், மீனவர் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இணைந்த வடகிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலுமிருந்துவந்த பெருமளவான மக்கள் இந்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

சிவில்சமூக செயற்பாட்டாளர் கண்டுமணி லவகுகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களிலிருந்து வருகைதந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது இறுதி யுத்ததினை குறிக்கும் வகையில் வெள்ளைக்கொடிகளை தாங்கியவாறு தமிழின படுகொலைக்கு நீதி கொடுங்கள்,வடகிழக்கு இணைந்த தீர்வினை வழங்கு போன்ற கோசங்களை எழுப்பியவாறு பேரணியொன்று காந்திபூங்காவில் நடைபெற்றது.

இந்த பேரணியானது நினைவுதினம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்தபோது அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.இந்த பொதுச்சுடரினை யுத்ததில் பாதிக்கப்பட்டு இழப்புகளை எதிர்கொண்ட குடும்பத்தின் உறவுகள் ஏற்றிவைத்தனர்.அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்த உறவுகளின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து தமிழின அழிப்புக்கு நீதிகோரியும் தமிழர்களுக்கான தீர்வினை வலியுறுத்தும் வகையிலான மகஜர் ஒன்று சர்வதேச சமூகத்திற்கு அனுப்பிவைக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் இஸ்ஸடீனிடம் வழங்கிவைக்கப்பட்டது.அந்த மகஜரில் தமிழர்களின் இழப்புகளுக்கான நீதியும் அவர்களுக்கான தீர்வினையும் வலியுறுத்தப்பட்டது.அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2024 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள விளிம்புநிலை மக்கள், அடிமட்ட சிவில் சமூகங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து போரில் கொல்லப்பட்ட எமது அன்புக்குரியவர்களை நினைவு கூருகிறோம்.

இத்தீவின் சிறுபான்மை இனத்;தவர் என்ற வகையில், மூன்று தசாப்தங்களாக எமக்கெதிராக அரசினால் நடத்தப்பட்ட இரக்கமற்ற போரினால் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களாகிய நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். 2009 ஆம் ஆண்டில், போரின் கடைசிக் கட்டங்களில், கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் தொடர்ச்சியான செல் தாக்குதல்களாலும், வான்வெளித் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர்.

பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் குறிவைக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தில் “மோதல் தவிர்ப்பு வலயம்” என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்த பொதுமக்களுக்கு எதிராக இலங்கை அரசு இரசாயன குண்டுகள் மற்றும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியது.

ஆதாரங்களின்படி 40,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போரின் கடைசி கட்டத்தில் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் காயம் அடைந்தனர், கைகால்களை இழந்தனர், மற்றும் அவர்களில் பலர் இன்னும் தங்கள் உடலில் குண்டு சன்னங்களுடனும் மற்றும் தோட்டாக்களுடன் வாழ்கின்றனர். உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் தடைபட்டதால், பட்டினியும் பசியும் நிலவியது. மக்களுக்கு உப்பு இல்லாமல் அரிசி கஞ்சி (கஞ்சி) வழங்கப்பட்டது. குழந்தைகள் கஞ்சி சேகரிக்கச் சென்றபோது அவர்கள் செல் தாக்குதலில் சிக்கினர்.

பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வரிசையில் நின்று உணவுப் பொருட்களை சேகரித்தபோது, அவர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. மக்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள தங்கள் அன்புக்குரியவர்களின் சடலங்களை விட்டு வெளியேறினர்.

போரின் முடிவில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அரச இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டனர். திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று நம்பி குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இராணுவத்திடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர்களில் பலர் இராணுவத்தினரால் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் திரும்பவில்லை மற்றும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தமிழ்சமூகம் இன்னமும் கூட்டுப் பேரதிர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறது. போரின் கடைசிக் கட்டத்தில் 40,000 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் கூட்டுத் துன்பங்களும் பாரிய படுகொலைகளும் இனப்படுகொலையாக சர்வதேச சமூகத்தினாலோ அல்லது தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களினாலோ இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தையும் இலங்கை அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்,

• வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு

• வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உண்மை மற்றும் நீதி

• போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல்

• பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் நபர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

• வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவருதல்

• வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள அனைத்து வகையான நில ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்

• சிறுபான்மை மத மற்றும் கலாச்சார தளங்களை ஆக்கிரமிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்

• பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச்சட்டம் ரத்து செய்யுங்கள்.

Related posts