நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்

நகைச்சுவை நடிகர் ஒருவரால், எமோஷனையும், சீரியஸையும் நிச்சயம் கொண்டுவர முடியும். அதனால் காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். சூரி அதற்கு முக்கிய உதாரணம்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சூரியின் ‘கருடன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சீமராஜா படப்பிடிப்பில் சூரியிடம் நீங்கள் கதையின் நாயகனாக நடிக்கலாம் என முதன்முதலில் நான்தான் கூறினேன். ஆனால், அப்போது அவர் அதை ஏற்கவில்லை.

ஒருநாள் வந்து, ‘தம்பி வெற்றி அண்ணே கூப்டாரு. பதற்றமாக இருக்கு. முதல் படம் பண்ணிருவேன். அடுத்து யாரும் கூப்பிடாமல் விட்டால் என்ன செய்வேன்’ என கூறினார். முதலில் நீங்கள் நடித்து உங்கள் திறமையை வெளியே கொண்டுவாருங்கள். இப்படியான ஒருவர் திரையுலகத்துக்குத் தேவை என்றேன். உங்கள் வாழ்வின் திருப்பமான தருணம் இது என்பதை அன்று அவரிடம் சொன்னேன்.

நகைச்சுவை நடிகர் ஒருவரால், எமோஷனையும், சீரியஸையும் நிச்சயம் கொண்டுவர முடியும். அதனால் காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். சூரி அதற்கு முக்கிய உதாரணம். சீரியஸாக நடிக்கும் ஒருவரால் காமெடி செய்ய முடியாது; அது மிகவும் கஷ்டம். ஆனால், காமெடி நடிகரால் எல்லவாற்றையும் கொண்டு வர முடியும்.

அடுத்து ‘கொட்டுக்காளி’ படத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப் படம் ‘விடுதலை’ படத்தின் அடுத்த கட்ட நகர்வாக சூரிக்கு அமையும் என நம்புகிறேன். ‘கொட்டுக்காளி’ படத்தை வெற்றிமாறனிடம் காட்ட ஆவலாக உள்ளேன். சசிகுமார் நல்ல மனிதர். அவருடன் இணைந்து நடித்தால் இன்னும் மகிழ்வேன். அதற்கான சூழல் அமையும் என நம்புகிறேன்” என்றார்.

Related posts