லண்டனில் இருந்து சிங்கப்பூரை நோக்கி பயணித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மோசமாக ஆட்டம் கண்ட சம்பவத்தில் பயணி ஒருவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பாங்கொக்கிற்கு திசைதிருப்பப்பட்ட போயிங் விமானம் நேற்று பின்னேரம் தரையிறங்கியது. பயணப்பாதையின்போது விமானம் கடுமையாக குலுங்கியதாக அந்த விமானசேவை கூறியது. விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 விமானப் பணியாளர்கள் இருந்துள்ளனர்.
பயணிகளுக்கான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு தாய்லாந்து நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவதாகவும் மேலதிக உதவிகளை வழங்குவதற்காக குழு ஒன்றை பாங்கொக் அனுப்பி இருப்பதாகவும் விமான சேவை கூறியது.
விமானத்தில் என்ன நிகழ்ந்தது என்பது தொடர்பில் உடன் உறுதி செய்யப்படவில்லை.
பயணத்தின்போது விமானம் குலுங்குவது வழக்கமாக நிகழும் ஒன்று என்றபோதும் இது போன்ற மோசமான சம்பவம் அரிதாகவே பதிவாகியுள்ளது.
சில நேரங்களில் இவ்வாறு நிகழ்வதை எதிர்வுகூற முடியமாக இருப்பதோடு அவ்வாறான சந்தர்ப்பத்தில் விமானிகள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுப்பார்கள். இது வானிலையுடன் தொடர்புபட்டது என்றபோதும் இந்தக் கொந்தளிப்பு நிலை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் இடம்பெறக் கூடியதாகும்.