ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
த.செ.ஞானவேல் இயக்கி வரும் ‘வேட்டையன்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடிக்க உள்ளார். தொடர் படப்பிடிப்புகளுக்கிடையில் ஓய்வுக்காக அண்மையில் அபுதாபி சென்றார் ரஜினிகாந்த். அங்கு அவர் லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசுஃப் அலியுடன் காரில் செல்லும் வீடியோக்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு அபுதாபியில், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டின் காலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது கலீஃபா அல் முபாரக் வழங்கினார். அப்போது லுலு குழுமத் தலைவர் யூசுஃப் அலி உடன் இருந்தார். இந்த விசா நடைமுறைகள் அனைத்தையும் யூசுஃப் அலி கவனித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில், “அபுதாபி அரசாங்கத்திடம் இருந்து மதிப்புமிக்க யுஏஇ கோல்டன் விசாவைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அபுதாபி அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
மேலும், இந்த விசாவை எளிதாக்கியதற்காக லுலு குழுமத்தின் தலைவரும், என் நல்ல நண்பருமான யூசுப் அலி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.