மதுரை அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த சங்கர நாராயணனும் (ராமராஜன்) அவர் நண்பர் மூக்கையாவும் (எம்.எஸ்.பாஸ்கர்), சென்னையில் உள்ள ஃபஸில் பாய் (ராதாரவி) வீட்டுக்கு வருகிறார்கள்.
பிறகு, தி.நகரிலுள்ள வங்கி ஒன்றை வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியுடன் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார், சங்கர நாராயணன்.
வங்கி மானேஜரின் வீட்டுக்குள் மூக்கையாவும், மற்றொரு அதிகாரி வீட்டுக்குள் ஃபஸில் பாயும் துப்பாக்கியுடன் நுழைகிறார்கள்.
போலீஸ், வங்கி முன் குவிகிறது. இந்த மூன்று பேரும் யார்? அவர்களுக்கான நோக்கம் என்ன? ஏன் இப்படி செய்கிறார்கள் என்பதற் கான காரணம்தான் படம்.
‘குழந்தைகளிடம் டாக்டராகணும் என்ஜினீயராகணும்னு சொல்லி வளர்க்கிறோம்,
கடன் வாங்காம வாழணும்னு சொல்லி வளர்க்கிறோமா?’ என்ற கேள்வியுடன், கருத்துச் சொல்கிறது ராகேஷ் இயக்கி இருக்கும் இந்தப் படம்.
வீட்டுக்கடன் மூலம் மக்களை எப்படி சுரண்டுகிறார்கள் என்பதையும் வங்கிக் கடனுக்குப் பின், கட்டுமான நிறுவனங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவு உள்ளிட்ட விஷயங்களையும் தெளிவாகச் சொல்கிறது வி.கார்த்திக் குமாரின் கதை.
வழக்கமான தொடக்கம், திடீர் ட்விஸ்ட், பிளாஷ்பேக், நியாயம் பேசும் கிளைமாக்ஸ் என்கிற டெம்பிளேட் திரைக்கதைதான் என்றாலும் சில இடங்களில் விறுவிறுப்பாகச் செல்லும் படம், கலங்கவும் வைக்கிறது.
ஆனால்பின்பாதியில் வரும் நீளமான காட்சிகளாலும் அழுத்தமும் லாஜிக்கும் இல்லாத முதல் பாதியாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் நடித்திருக்கிறார். சாமானியனான அவர் யார் என்பதற்கான பிளாஷ்பேக் ஏற்றுக்கொள்ளும்படியாகவே இருக்கிறது.
ஆக்ஷனில் தடுமாறினாலும் சென்டிமென்ட் காட்சியில் போதுமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
அவர் படங்களில் ஹிட்டான, செண்பகமே செண்பகமே, மதுரை மரிக்கொழுந்து உள்ளிட்ட பாடல்கள் வரும் இடங்கள், சுவாரஸ்யமாகவே கடக்கின்றன.
பூவிழுந்த கண்ணுடன் கிராமத்து நண்பராக எம்.எஸ்.பாஸ்கர், மகன் அமெரிக்காவில் இருக்க, தனியாக வசிக்கும் ஃபஸில் பாயாக ராதாரவி, பாசத்தைக் கொட்டும் தீபா சங்கர், போலீஸ் அதிகாரியாக காமெடி பண்ணும் கே.எஸ்.ரவிகுமார், கஜராஜ், வில்லங்க பில்டர் மைம் கோபி, வங்கி மானேஜர் போஸ் வெங்கட், அவர் மனைவி வினோதினி என துணை கதாபாத்திரங்களும் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கின்றன.
இளையராஜாவின் பின்னணி இசை, கதையைக் காப்பாற்ற அதிகம் உழைத்திருக்கிறது. சி.அருள் செல்வனின் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகள் ஈர்க்கின்றன.
இன்றைய காலகட்டத்தில் வீடு வாங்குவதில் உள்ள ஆபத்துகள் குறித்தும், கடன் வாங்காமல் இருப்பதன் அவசியத்தைச் சொன்னதற்காகவும் இந்தச் சாமானியனை வரவேற்கலாம்.