வடக்கன்’ தலைப்பை சென்சார் மறுக்க என்ன காரணம்?

வெண்ணிலா கபடி குழு, எம்மகன், நான் மகான் அல்ல உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் பாஸ்கர் சக்தி, தேசிய விருதுபெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்கு கதை, வசனம் எழுதியிருந்தார். அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘வடக்கன்’. இந்த டைட்டில், சர்ச்சையில் சிக்கியதை அடுத்து ‘ரயில்’ என்ற தலைப்புடன் வெளியாக இருக்கிறது படம். இயக்குநர் பாஸ்கர் சக்தியிடம் பேசினோம்.

வடக்கன் தலைப்பை சென்சார் மறுக்க என்ன காரணம்?
குறிப்பிட்ட சாராரை குறைச்சு மதிப்பிடறதா இந்த தலைப்பு இருக்குனு அவங்க நினைக்கிறாங்க. நான் அப்படி நினைக்கலை. எனக்கு அப்படித் தோணவும் இல்லை. ஆனா, ‘இந்த தலைப்பு, அவங்களை அவமானப்படுத்தற மாதிரி இருக்கு. ஒரு மொழி பேசறவங்களையோ, ஒரு பகுதியை சேர்ந்தவங்களையோ அப்படி வேறுபடுத்தி, வித்தியாசப்படுத்திப் பார்க்கக் கூடாது, அது சமூகத்துல பிரிவினையை உண்டாக்கும், அதனால தலைப்பை மாத்துங்க’ன்னு சொன்னாங்க. இது அவங்க வாதம்.

நீங்க என்ன சொல்றீங்க?
தனிப்பட்ட முறையில என் கருத்து என்னன்னா, ஒரு கதைக்கு ஏற்ற தலைப்பை வைக்கிறோம். அதைக் கதையோட பொருத்திப் பார்த்துதான், அது வேணுமா வேண்டாமான்னு முடிவு பண்ணணும். ஒரு வார்த்தையை மட்டும் வச்சுகிட்டு, ‘இது நல்லாயில்ல, வேற வையுங்க’னு சொல்றது சரியானதில்லைன்னு நினைக்கிறேன். எப்போதும் குடிச்சுட்டே இருக்கிற ஒருத்தனை, ‘குடிகாரப்பயலே’ ன்னுதானே இன்னொருத்தன் திட்டுவான். அது தப்பான வார்த்தை, அது கூடாதுன்னு சொன்னா, எப்படி கதை பண்ண முடியும்? ரூல்ஸ்-னு ஒன்னு இருக்கும். இருந்தாலும் ‘கிரியேட்டிவ் ஒர்க்’ல அந்த வார்த்தை என்ன அர்த்தத்துல உபயோகப் படுத்தப்பட்டிருக்கு, என்ன காரணத்துல சொல்லப்பட்டிருக்குன்னு தெரிஞ்சுகிட்டு மறுக்கறது சரியா இருக்கும். அது இல்லாம வார்த்தையை புடிச்சுட்டு முடிவு எடுக்கிறது, கிரியேட்டிவ் விஷயங்களுக்கு நியாயமானதா இல்லைன்னு நினைக்கிறேன்.

படத்தின் கதை பிரிவினையைத்தான் பேசுதா?
பிரிவினையையோ, வேற்றுமையையோ வலியுறுத்துற கதை இல்லை. இது எல்லோரும் ரசிக்கக் கூடிய எமோஷனலான கதை. மனிதர்கள், சக மனிதர்களை எப்படிப் பார்க்கணும்னு சொல்ற படம். வெவ்வேறுவிதமான ரசனை, மொழி, இனம், கலாச்சாரம், உணவு… இப்படி இருந்தாலும் நாம ஒன்னாதான் வாழ வேண்டியிருக்கு. அப்படி பழகும்போது மத்தவங்களை எப்படி அணுகணும், எப்படியிருந்தா சமூகத்துக்கு நல்லாயிருக்கும் அப்படிங்கற என் பார்வையை, இந்தப் படத்துல சொல்லியிருக்கேன்.

Related posts