தொடர் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

கன்னியாகுமரியில் அமையப் பெற்றுள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருக்கும் காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரிக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, விவேகானந்தர் பாறைக்கு தனி படகுமூலம் சென்று, அங்குள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று இரவு ஏழு மணி அளவில் தனது தியானத்தை தொடங்கிய அவர் இன்று காலை தியானத்தில் ஈடுபட்டிருக்கும் காணொளிகளும், புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.

ஊடகத்தில் வெளியான காணொளி குறித்து இணையம் முழுவதும் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.‌

இந்நிலையில் கன்னியாகுமரிக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பு அளிக்க பாஜக தலைவர்கள் யாரும் செல்லவில்லை. இதனை அரசியல் சார்ந்த நிகழ்வாக மாற்ற வேண்டாம் என அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தி இருந்ததால் பாஜக தலைவர்கள் யாரும் பிரதமரை வரவேற்கும் நிகழ்வில் பங்குபற்றவில்லை என அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு நாட்டின் உயர் பதவியில் இருக்கும் இந்திa பிரதமர் நரேந்திர மோடி.. அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று அவர் கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபட்டிருப்பதும், அது தொடர்பான காணொளி இணையம் முழுவதும் பகிரப்படுவதும், அரசியல் ரீதியாக பாரிய விளைவு தேர்தலில் எதிரொலிக்கும் என்றே அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிரதமர் மோடியில் தியானத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து வருகிறது. இந்திய கடற்படையினர், மெரைன் போலீஸார், விமானப்படை வீரர்கள், மற்றும் சட்டம், ஒழுங்கு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலுக்குள் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்திய கடற்படையை சேர்ந்த இரு கப்பல்களில் கடற்படை வீரர்கள் ரோந்து சுற்றியவாறு உள்ளனர்.

கன்னியாகுமரி கடலில் 3 மைல் நாட்டிக்கல் தொலைவு வரை மீன்பிடி படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும் கன்னியாகுமரி பகுதியில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. பிற பகுதிகளில் வழக்கம்போல் மீன்பிடி பணிகள் நடைபெற்றது.

கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாத வகையில் வெள்ளிக்கிழமை விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்ல சுற்றுலாப் பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். ஆதார் கார்டு இருக்கும் சுற்றுலாப் பயணிகள் மட்டும் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆதார் எண்களை பாதுகாப்பு அதிகாரிகள் சரிபார்த்த பின்னரே சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தனர்.

பிரதமர் மோடி தியானம் செய்யும் தியான மண்டபத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. முகப்பு பகுதியில் உள்ள பெரிய தியான அறையுடன் கூடிய மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வந்தனர். பகல் 12 மணியளவில் பாதுகாப்புக்காக சுற்றுலாப் பயணிகளின் படகு சேவை நிறுத்தப்பட்டு மீண்டும் 3 மணியளவில் துவங்கப்பட்டது. முக்கடல் சங்கமம், கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு நிகழவில்லை.

Related posts