ஐடி-யில் பணியாற்றும் விஜய்யின் (விஜய் கனிஷ்கா) அம்மாவும் (சித்தாரா) தங்கையும் (அபி நட்சத்திரா) முகமூடி அணிந்த 1 மர்ம நபரால் கடத்தப்படுகிறார்கள்.
காவல்துறை துணை ஆணையர் யாழ்வேந்தன் (சரத்குமார்) குற்றவாளியைக் கண்டுபிடிக்க முயல்கிறார்.
ஆனால் அவரது முயற்சிகளை முறியடிக்கும் அந்த முகமூடி மனிதன், விஜய் ஒரு கொலை செய்ய வேண்டும் என்றும் மறுத்தால் அம்மாவையும் தங்கையையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டுகிறான்.
எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத வள்ளலார் பக்தனான விஜய், கொன்றானா? அந்த மர்ம மனிதன் யார்? அவன் நோக்கம் என்ன என்பது மீதிக் கதை.
இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்திருக்கிறார்.
சூரியகதிர், கார்த்திகேயன் என இரட்டை இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். வழக்கமான அறிமுகக் காட்சிகளுக்குப் பிறகு படம் மையக் கதைக்குள் நுழைந்துவிடுகிறது.
விஜய்யின் அம்மாவும் தங்கையும் கடத்தப்பட்டதில் இருந்து இடைவேளை வரை விறுவிறுப்பு.
எலியைக் கூட கொல்லக் கூடாது என்று நினைக்கும் நாயகனுக்கு மனிதர்களைக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதும் அதை ஏற்படுத்துபவரின் அடையாளம் தெரியாத மர்மமும் பரபரப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.
நாயகன் அரசியல் செல்வாக்குமிக்க ரவுடியை கொல்வதற்காக அவன் வீடு தேடிச் செல்லும் இடைவேளைக் காட்சியும் அந்த அதிரடி சண்டைக் காட்சியும் இருக்கை நுனியில் அமர வைக்கின்றன.
இரண்டாம் பாதியிலும் தொடர்கிறது, இதே விறு விறுப்பு. மர்ம மனிதனின் செயல்களுக்கான காரணத்தைச் சொல்லும் ஃப்ளாஷ்பேக், கரோனா சூழலை வைத்து சென்டிமென்ட் காட்சிகளால் நிறைந்துள்ளது.
பெருந்தொற்று காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கம் பாராட்டுக்குரியது என்றாலும் டீன் கதாபாத்திரத்தை மோசமானவராகக் காண்பித்திருப்பது முரணாக உள்ளது.
மர்ம மனிதனின் கொடூரச் செயல்களுக்குக் காரணமாக அமையும் மருத்துவம் சார்ந்த ஊழல், நம்பத் தகுந்ததாக இல்லை. மர்ம மனிதன் யார் என்று தெரியவரும் இறுதிப் பகுதி ட்விஸ்ட் ஆச்சரியம்.
ஆனால் அவன், தான் திட்டமிட்டதை எப்படிச் செய்தான் என்பதை விளக்கும் காட்சிகளில் பல லாஜிக் ஓட்டைகள்.
அதேபோல் வன்முறைக் காட்சிகளும் அதிகம்.
விஜய் கனிஷ்கா உயிர்கள் மீதான பரிவையும் அம்மா- தங்கையைக் காப்பாற்ற வேண்டிய தவிப்பையும் சரியாக உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்ந்த நடிகனைப் போலவே இருக்கிறது அவர் நடிப்பு. காவல்துறை அதிகாரியாக சரத்குமார் ரசிக்க வைக்கிறார்.
அவருக்குக் கீழ் பணியாற்றும் காவலராக முனீஷ்காந்த், அம்மா சித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், டீன் கவுதம் வாசுதேவ் மேனன், அப்பா சமுத்திரக்கனி, ரவுடி ராமச்சந்திர ராஜு என அனைவரும் குறையற்ற நடிப்பைத் தந்துள்ளனர்.
சத்யாவின் பின்னணி இசையும் ராம்சரணின் ஒளிப்பதிவும் படத்தின் விறுவிறுப்புக்குப் பக்கப் பலமாக அமைந்துள்ளன.
அதீத வன்முறையும் தர்க்கப் பிழைகளும் இருந்தாலும் த்ரில்லர் ரசிகர்களை ஏமாற்றாது இந்த ‘ஹிட்லிஸ்ட்’.