நரேந்திர மோடிக்கு பிரதமர் தினேஷ் சபையில் வாழ்த்து!

மூன்றாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) விசேட கூற்றொன்றை முன்வைத்து, இந்திய தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

எமது அயல்நாடும் பல்வேறு விதத்தில் எம்முடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கும் நாடான இந்தியாவில் மூன்றாவது தடவையாகவும் மக்கள் வாக்குகள் மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு இணங்க பிரதமர் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்ட கால பலமான நட்புறவு, இருதரப்பு மற்றும் அன்னியோன்ய துறை சார்ந்த பிணைப்புகள் அவரது வெற்றி மூலம் மேலும் முன்னேற்றம் காண நாட்டின் பிரதமர் என்ற வகையில் எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் அவருக்கு உரித்தாகட்டும்!

பாராளுமன்ற ஜனநாயகத்தின் பலசாலி என நாம் அனைவரும் கருதும், உலகின் மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட நாடாக திகழும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியே அவர் பிரதமராக வெற்றி பெற்றுள்ளார்.

ஆசிய நாடுகளுக்கிடையில் நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் ஒருமைப்பாட்டை போன்றே இலங்கையுடன் இந்தியா கொண்டுள்ள நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இந்த சந்தர்ப்பத்தில் நாம் கௌரவத்துடன் நினைவுகூர வேண்டும்.

அந்த வகையில், நரேந்திர மோடி பெற்றுக்கொண்டுள்ள வெற்றி மூலம் மேலும் புதிய வெற்றிகள் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். அந்த வகையில் சமாதானம், அபிவிருத்தி, புதிய இலக்குகள் ஆகியவற்றை உலகுடன் பகிர்ந்துகொண்டு பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகள் மூலம் வெற்றிகளை பெற்றுக்கொள்ள இந்தியாவுக்கு வாய்ப்பு கிட்டட்டும் என்றார்.

Related posts