கமலின் ‘இந்தியன் 2’ பாடல் எப்படி?

கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் ‘கதறல்ஸ்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடையே இந்தப் பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

பாடல் எப்படி? – ‘இந்தியன்’ முதல் பாகத்தின் பாடல்களை மறந்து இந்தப் பாடலை கேட்பது நலம். இது முழுக்க முழுக்க அனிருத்தின் ‘வைப்’ பாடல். இதில் அழுத்தமான அரசியல் வரிகளையோ, உணர்வுபூர்வமான இசையையோ எதிர்பார்க்க முடியாது. ஜாலியான பாடல் என்ற அளவில் இப்பாடலை அணுகும்போது அனிருத் கொடுக்கும் ‘வைப்’ கிட்டலாம். எந்த அளவுக்கு ஜாலியான பாடல் என்றால், “தாத்தா வராறே, மூஞ்சு புக்குல வராறே… 7 மணிக்கு வராறே, ஏழரை தர போறாரே”, “பெல்டுல மினுக்கும் ஸ்டீலு, நேதாஜி ஆளு…கதற விட்றோம் விட்றோம்…” உள்ளிட்ட வரிகள் இக்கால தலைமுறையை குறிவைத்து இந்தியன் தாத்தாவுக்கான பாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

திரையரங்கில் அந்த நேரத்துக்கு ‘வைப்’ செய்யும் பாடலாக உருவாகியுள்ள இப்பாட்டை அனிருத் பாடியுள்ளார். ரோகேஷ் எழுதியுள்ளார். பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வரும் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts