பூ விவசாயியான சர்க்கார் (விதார்த்) தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவரது மகன் அருந்தவம் (கிருத்திக் மோகன்) மருத்துவராக ஆசைப்படுகிறார். அவரது கனவுக்கு உயிர் கொடுக்க நினைக்கிறார் தந்தை சர்க்கார். அதன்படி மத்திய அரசின் மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால், அவர்களுக்கான தேர்வு மையம் ஜெய்ப்பூரில் ஒதுக்கப்படுகிறது.
இதனால் கடும் சிரமத்தையும் தாண்டி, தந்தையும், மகனும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக ஜெய்ப்பூர் செல்ல, அங்கு என்ன நடக்கிறது, அந்தச் சம்பவம் அவர்களின் வாழ்வில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது? மருத்துவத்தை கனவாக கொண்டிருக்கும் மாணவனுக்கு ‘தகுதித் தேர்வு’வினால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? அது எப்பபடி பெற்றோர்களை பாதிக்கிறது என்பது படத்தின் திரைக்கதை.
அரசுப் பள்ளியில் படித்த எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தனது மருத்துவ கனவை அடைய, ‘தகுதித் தேர்வு’க்கு எத்தனை அழுத்தங்களுடன் தயாராக வேண்டியிருக்கிறது, ‘கோச்சிங் சென்டர்’ அதற்கான பணம், பெற்றோர்களுக்கான பொருளாதார நெருக்கடி, கடைசி நேர பதற்றங்கள், நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகள், வட மாநிலங்களில் ஒதுக்கப்படும் தேர்வு மையங்கள் என பல்வேறு பிரச்சினைகளை பேசியிருக்கிறார் இயக்குநர் சுப்புராமன்.
“சிலம்பம் கத்துட்டு வந்து கத்தி சண்ட போன சொன்னா எப்டி?”, “தகுதித் தேர்வுதான் முடிவென்றால், எதற்கு பள்ளிப் படிப்பு” போன்ற கேள்விகளையும் முன்வைக்கிறார். அனிதா மரணம் உள்ளிட்ட காட்சிகளையும் படம் பதிவு செய்கிறது.
கதைக்கருவும், நோக்கமும் பாராட்டத்தக்கது என்றாலும், அதனை சொல்லும் முறையில் செயற்கையான நாடகத்தன்மை இழையோடுவதால் படத்தை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. உண்மையான நிகழ்வை அடிப்படையாக கொண்ட படம் என்றாலும், கோர்ட் டிராமா காட்சிகள் யதார்த்ததுடன் ஒன்றாமல் தனித்து நிற்கிறது.
காவல் துறை அதிகாரியாக இருக்கும் ரகுமான் திடீரென வழக்கறிஞராக மாறுவது, அவரின் பழைய வழக்குக்கு நீதிமன்றத்தில் வைத்து கைது செய்வது, மாணவனே தனது வழக்கை வாதாடுவது, நினைத்த நேரத்தில் அமைச்சரை அழைத்து நீதிமன்றத்தில் நிற்க வைப்பது, ரயில் புறப்பட தாமதமானதால் ரயில்வே அதிகாரியை நீதிமன்றத்தில் அழைத்து விசாரிப்பது என நினைத்த நேரத்தில் நினைத்தபடியே சாத்தியமற்ற விஷயங்கள் திரையில் காட்சிகளாக வருவதால் ஒட்ட முடியவில்லை.
நீட் தேர்வு என்ற வார்த்தையை படம் முழுவதும் பயன்படுத்தவில்லை. மாறாக, தகுதித்தேர்வு என்றே பயன்படுத்துகிறார்கள் (சென்சார் பிரச்சினையாக இருக்கலாம்). மேலும் மாநில அமைச்சர் தேர்வு மையத்தை தமிழகத்தில் ஏன் ஒதுக்கவில்லை என்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் படம், நீட் தேர்வின் மற்ற பாதிப்புகளையும், அழுத்தமாக பதிவு செய்ய தவறுகிறது.
ரயிலில் எதற்கு ரிசர்வேஷன், அன்ரிசர்வேஷன், ஏசி என பாகுபாடு? தகுதித் தேர்வை போல எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான சீட்டை ஒதுக்க வேண்டியது தானே போன்ற வசனங்கள் சொல்ல வந்த கருத்தை விட்டு எங்கேங்கோ பயணிக்கின்றன.
மிகைப்படுத்துவதற்காக சில சென்டிமென்ட் காட்சிகளை திணித்திருப்பது அயற்சி. குறிப்பாக ரயிலில் பயணிக்கும்போது, மகள் போனில் பாடுவது, கடைசி நேரத்தில் தேர்வு மையத்துக்கு செல்லும்போது தேர்வாளர்களின் காலில் விழும் காட்சி, சுவாரஸ்யமில்லாத நீதிமன்ற வாதம், அதுவும் தூய தமிழில் ரகுமான் பேசிக்கொண்டிருப்பது, ஒரே நாளில் மாணவர்கள் புரட்சியில் இறங்குவது, ‘நாங்க எங்க பசங்கள அரசு பள்ளியில தான் சேர்ப்போம்’ என பெற்றோர்கள் திடீர் மனமாற்றம் என நாடக்கத்தனமும் செயற்கைத் தனமும் படத்தின் பலவீனம்.
பொருளாதார சிக்கலை தாங்கி கொண்டு மகனின் கனவுக்காக போராடும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த தந்தையாக உணர்வுப்பூர்வமான நடிப்பில் அசத்துகிறார் விதார்த். அவருக்கு உறுதுணையாக இருந்து, உடைந்து போகும் இடத்தில் வாணி போஜன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
ரகுமான் கதாபாத்திரம் மேலோட்டமாகவும், ‘நல்லவர்’ என்ற ஹீரோயிசத்துக்குள்ளும் சிக்கி தவித்தாலும், நடிப்பில் அழுத்தம் கூட்டுகிறார். மாணவரான கிருத்திக் மோகன் சிறப்பான பங்களிப்பை செலுத்துகிறார். ‘விஜய் டிவி’ ராமர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
ராகவ் பிரசாத்தின் இசையில் பாடல்கள் கவரவில்லை. பின்னணி இசை பெரும்பாலும் காட்சிகளுக்கு உயிர் கொடுக்காமல் பிரிந்திருப்பதை உணரமுடிகிறது. கார்த்திக் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
அழுத்தமான கதையை, அதன் இயல்பிலிருந்து விலகி செயற்கையான சென்டிமென்டையும், ஓவர்நைட் புரட்சி காட்சிகளையும் வலிந்து திணிப்பது நல்ல நோக்கத்தை கூட சிதைத்துவிடும் என்பதை படத்தின் பெரும்பாலான காட்சிகள் உணர்த்துகின்றன.