15 வருடங்களுக்கு முன் இலட்சக்கணக்காக கொல்லப்பட்ட எம் மக்களின் சாபம் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.நேற்று (07) பாராளுமன்றத்தில் தேசத்தின் கடன் மறுசீரமைப்பு தேசத்தை கட்டியெழுப்புவது தொடர்பான விவாதத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கான அரசியல் அங்கீகாரம் வழங்கி இந்நாட்டின் மக்களாக ஏற்று அவர்களுக்கான தீர்வினை வழங்காத மட்டும் இந்நாட்டிற்கான விடிவு காலம் என்பது வராது என்பதனை உறுதியாக கூறிக் கொள்கின்றேன். விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாகியும் கூட இன்றளவிலும் எம்மக்களுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை. இனவாத செயற்பாடுகள் தொடந்தும் எம் மக்களுக்கு ஏதிராக பல வழிகளிலும் இடம்பெறுகின்றது.
பாராளுமன்றத்தில் முக்கியமாக தேசத்தின் கடன் மறுசீரமைப்பு, தேசத்தை கட்டி எளுப்புவது தொடர்பான பல விடயங்கள் பல தரப்பினராலும் பேசப்படுகின்றன. வேடிக்கையான விடயம் என்னவெனில் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்ல பெரும் பங்கு வகித்த வெளிவிவகார அமைச்சர் கூட நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பில் பேசுவதாகும்.
இலங்கை இவ்வாறு இந் நிலைக்கு உள்ளாகியதன் காரணம் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 1948ம் ஆண்டிலிருந்து தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாட்டிலே நடந்த ஒவ்வொரு அநீதிகளுமே இந் நாட்டிற்கான சாபக்கேடாகும். இந் நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பிராயச்சித்தம் செய்யும் வரையும், அவர்களின் பிரச்சினைகளுக்கு நீதியான தீர்வுகளை வழங்கும் வரையும், இந் நாட்டிலே “தமிழ் ஒரு தேசிய இனம்” இனமென்ற அங்கீகாரம் வழங்கும் வரை இந் நாட்டினைக் கட்டியெழுப்புவதென்பது ஒரு கனவாகவே மக்களுக்கும், பெரும்பான்மை சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் காணப்படும்.
பாராளுமன்றத்தில் எவ்வகையான சட்டமூலங்களை கொண்டு வந்தாலும், கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டாலும், IMF நிபந்தனைகளைப் பற்றி பேசினாலும் இந் நாட்டில் தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தையும், தீர்வினையும் வழங்காத வரை இந் நாட்டிற்கு விடிவு இல்லை என ஆணித்தரமாக கூறிக் கொள்கின்றேன். மே 18 ஆம் திகதி விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் கூட இன்றும் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதியில்லாத நிலையில் தமிழ் மக்கள் நீதிக்காக ஏங்குகின்றார்கள்.
இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டுமெனும் நோக்கோடு ஒவ்வொரு வேட்பாளராக களமிறங்க இருப்போர் போலி வாக்குறுதிகளை வழங்குகின்றனர். சில தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் வேட்பாளர்களுடைய முக்கியமாக ஜனாதிபதியின் சலுகைகளைப் பெற்று இன்று ஜனாதிபதியை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்னும் கற்பனையில் இருக்கின்றார்கள். சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலைகளுக்கான Permit வழங்கப்பட்டுள்ளதனை அறிய முடிகின்றது.
வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல சலுகைகள் கிடைத்துள்ளமையினை அறிகின்றோம். இன்று ஜனாதிபதியாக உள்ளவர் முன்னைய நாட்களில் பிரதமராக இருந்த போது பல விடயங்களை மேற்கொள்ள ஜனாதிபதி தடுத்தார் எனக் கூறினார். ஆனால் இன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கும் போது சர்ச்சைக்குரிய சட்ட மூலங்களை பாராளுமன்றத்தினூடாக அமுல்படுத்துகின்றார்.
பாராளுமன்றமில்லாமல் நிறைவேற்று அதிகாரத்தினை வைத்து செய்யக்கூடிய விடயங்களைக் கூட ஜனாதிபதி செய்யவில்லை. இவர் 2022ம் ஆண்டு நாங்கள் முன்வைத்த விடயங்களுக்கு இன்றும் தீர்வில்லை. 15 வருடங்களைத் தாண்டியும் அரசியல் கைதிகளுக்கு விடுதலையில்லை. தசாப்தங்களாக சிறையிலுள்ள அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கூறியும் இன்னும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் சோடிக்கப்படுகின்றன.
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய விரும்பாதவர்கள் ஜயமகா என்ற 19 வயதுப் பெண்ணின் தலையினை சிதைத்து கொடூரமாகக் கொலை செய்த நபருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது. இதற்கான காரணம் அவர் சிறையிலிருந்த போது நல்ல நடத்தைகளை வெளிக்காட்டினார் என்கின்றனர். துமிந்த சில்வாவிற்கும் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அரசியல் கொள்கைக்காக போராடிய அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லை.
இன்று காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்கள் எத்தனையோ வருடங்களாக போராடுகின்றனர். இவர்களுக்கு TRC என்னும் பெயரில் ஒரு புதிய சட்ட மூலத்தை கொண்டு வருகின்ற போது பொறுப்புக்கூறல் அதாவது சட்ட ரீதியாக தவறு செய்தவர்களை தண்டிக்கும் எந்த பொறிமுறையும் இல்லை. ஐ.நா மனித உரிமையிலே மீண்டும் ஒரு பிரேரணை வரவிருப்பதால் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஐ.நா மனித உரிமையினை ஏமாற்றும் விடயமாகவே நாம் கருதுகின்றோம். என்பதற்காக ஐ.நா மனித உரிமையினை ஏமாற்றினாலும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது.
தொல்பொருள் என்னும் பெயரில் அடிக்கடி வடக்கு, கிழக்கிலே தமிழ் பேசும் மக்களின் நிலங்களை அபகரிக்கின்றீர்கள். மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரைக்காக தமிழ் மக்கள் போராடுகின்றார்கள். ஜனாதிபதி கடந்த வருடம் அவர்களுக்கு நட்டஈடு வழங்குவதாக கூறியும் இன்றுவரை வழங்கப்படவில்லை. ஆனால் இன்றும் பண்ணையாளர்கள் வீதியில் இருக்கின்றனர். பண்ணையாளர்கள் 10000 ஏக்கர் கேட்டால் இவர்கள் 1000 தருவதாக கூறுகின்றனர். கடந்த காலத்தில் அனுராதபுரத்தில் ஒரு அரசியல் கைதியினுடைய தலையில் துப்பாக்கி வைத்து சப்பாத்தினை பிடிக்க சொன்ன ஒரு அமைச்சர் இன்று 3,000 ஏக்கர் தருவதாக கூறுகின்றார்.
அம்பாறை ஆலையடி வேம்பில் இராணுவ முகாமிற்கு பூப்பந்து விளையாட ஒரு நிலம் தேவை என்கின்றார்கள். ஜனாதிபதி இராணுவ முகாம்களை விடுவிக்கின்றோம் எனக் கூறும் போது கிழக்கு மாகாணத்தில் புதிதாக காணிகளை பறித்திருக்கின்றார்கள். திருக்கோவிலில் 43 இற்கும் மேற்பட்ட தனியார் உறுதியுள்ள காணிகளை உடைய மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான Stickers ஒட்டப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கு அநீதிகளை இழைத்து அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமென நினைக்கின்றனர்.
வேலைவாய்ப்புக்களும் இல்லை, வடக்கு கிழக்கு பண்ணையாளர்களுக்கு நிலங்கள் வழங்கப்படவில்லை. எங்கள் வளங்களைக் கொண்டு வாழ்வாதாரத்தினை முன்னேற்ற நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டாலும் அதற்கும் தடை ஏற்படுத்துகின்றார்கள். மீனவர்களைப் பார்த்தால் சட்ட விரோத மீன்பிடி முறைகளை பயன்படுத்துகின்றனர். இந் நிலை தொடருமாயின் வேறு தீவுகளுக்கு சென்றே மீன்பிடியில் ஏற்பட வேண்டிய நிலை ஏற்படும். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை. இவை முழுமையான இனவாத செயற்பாடு. வடக்கு கிழக்கிற்கு அதிகாரங்கள் பகிரப்படுமாயின் நாங்கள் எமது தேசத்தை கட்டி எளுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். தென்னிந்தியாவுடன் பாலமொன்றினை அமைத்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமெனக் கூறுகின்றனர். இது தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமாயின் அதனையும் அவர்கள் தடை செய்வார்கள். இனவாதம் தலைதூக்கியுள்ளதால் வாழ்ந்த தமிழ் மக்களுக்கும் நீதியில்லை, வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் நீதியில்லை. வெளிநாட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உதவி நாடுகின்ற போதும் இந் நாட்டிலேயே பிறந்து வளர்ந்த இந் நாட்டுப் பிரஜைகளாக உள்ள ஒரு இனத்தையே இவ்வாறு அடக்கி அநீதியிழைத்து வன்முறை மேற்கொள்ளும் இந்த அரசாங்கம் தெரிவு செய்யும் உறுப்பினர்கள் எவ்வாறு இருப்பார்கள் என முதலீட்டாளர்கள் சந்தேகிக்கின்றனர். அவர்களின் சந்தேகத்தினை தீர்ப்பதாக இருந்தால் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்கும் போது மட்டுமே இது தீர்க்கப்படும்.
காணாமலாக்கப்பட்டோர் உறவினர் 5 சம்பவங்களை வழங்கி விளக்கம் தரக் கூறினும் இன்று வரை விளக்கமளிக்கப்படவில்லை. உண்மைகளை மூடி மறைப்பதே அரசாங்கத்தின் நிலை. இவ்வாறான சூழலிலேயே தேர்தல் நிகழ இருக்கின்றது. தமிழ் மக்கள் விழிப்பாகவே இருக்கின்றார்கள். தமிழர்களுக்கான நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தளராது என தெரிவித்தார்.