கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
40-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்க்கப்பட்டு வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
10-க்கும் மேற்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் நேற்று இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ்(46), மண்ணாங்கட்டி மகன் சுரேஷ்(45), கந்தன் மகன் சேகர்(61) ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 7 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆட்சியர் சொல்வதை ஏற்க முடியாது: சம்பவம் குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார், “கள்ளக்குறிச்சி நகரில் கஞ்சா விற்பனையும், கள்ளச்சாராயம் தடையின்றி நடைபெறுகிறது.
தற்போது சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
மாவட்ட ஆட்சியர் வயிற்றுப் போக்கால் உயிரிழந்ததாகக் கூறுவதெல்லாம் ஏற்புடையது அல்ல.அரசு உடனடியாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளிக்கவேண்டும்.
கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.