ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவி

அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்ததாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ பி. ஹேரத் தெரிவித்தார்.

வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிவாரணத் திட்டங்களை சீர்குலைத்து, அனுபவமற்ற தரப்பினரிடம் கையளித்து நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு கொண்டு செல்வதா என்பதை மக்கள் நன்கு சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் 19ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத்,

அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்பதற்குத் தேவையான வேலைத் திட்டத்தை செயற்படுத்த அமைச்சு என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட்டது. நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருந்த வேளையில், எமது அமைச்சின் பொறுப்பான நடவடிக்கையினால், அந்த ஆபத்து முற்றாக மறைந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமையின் கீழ், அமைச்சரவை தலைமையிலான அரசாங்கம் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.

மேலும், சட்டக் கட்டமைப்பை மறுசீரமைக்கத் தேவையான பல சட்டமூலங்களை நிறைவேற்றி நாட்டை சரியான பாதையில் வழிநடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ஊழலைத் தடுக்கவும், சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தேவையான முறையில் சர்வதேச ஆதரவு கிடைத்ததால்தான் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிந்தது. அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டல் மற்றும் உறவுகள் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

மேலும், கொரோனா பாதிப்பால் உலகின் பல நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. சில நாடுகளால் இன்னும் அந்த நிலையிலிருந்து மீள முடியவில்லை. ஆனால் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் அதிலிருந்து விடுபட்டு நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல எம்மால் முடிந்தது.

சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட எமது நட்பு நாடுகளின் ஆதரவின் காரணமாக எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியிலிருந்து விடுபட்டு வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது. அதன் பலனை மக்கள் தற்போது கண்டுகொள்ள முடிந்துள்ளது. எனினும், ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து எதிர்க்கட்சிகள் சிலர் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

எனவே, அனுபவமற்ற தரப்புகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சந்தர்ப்பம் வழங்கி நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு இழுத்துச் செல்வதா? இல்லையா? என்பதை மக்கள் சரியாகச் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும்” என்று கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ பி. ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Related posts