யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவ பெருவிழா இன்று (20) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இரதோற்சவம் இன்று காலை வசந்த மண்டப பூசைகளுடன் ஆரம்பமாகியது.
நாகபூசணி அம்மனுக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வசந்த மண்டபத்திலே விநாயகப் பெருமான், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று மூன்று மூர்த்திகளும் உள்வீதி, வெளி வீதி எழுந்தருளி தனித்தனி தேரிலே ஏறி முத்தேர் பவனியாக இரதோற்சவம் இடம்பெற்றது.
16 தினங்களை கொண்ட ஆலய மஹோற்சவம் கடந்த 07 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் இன்று இரதோற்சவமும் நாளை (21) தீர்த்தோற்சவமும் அன்றைய தினம் மாலை திருவூஞ்சலும் நடைபெற உள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை இரவு பூங்காவனத் திருவிழாவும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (23) தெப்போற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.