ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரஸ்ஸல் க்ரோவ் நடிப்பில் வெளியாகி இன்றளவும் வரலாற்றுத் திரைப்படங்களுக்கும், போர்க்கள காட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வரும் படம் ‘க்ளாடியேட்டர்’. ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ வெப் தொடர் தொடங்கி நம் ‘பாகுபலி’ வரையிலும் ‘க்ளாடியேட்டர்’ திரைப்படத்தின் தாக்கத்தை உணரலாம்.
‘கிளாடியேட்டர் 2’ ட்ரெய்லர் எப்படி?
2000ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகமெங்கும் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட ஐந்த ஆஸ்கர் விருதுகளையும் குவித்தது.
கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கிளாடியேட்டர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரிட்லி ஸ்கார் உருவாக்கியுள்ளார். தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – முந்தைய பாகத்தில் ரோம பேரரசர் மார்க்கஸ் ஆரேலியஸின் (வாக்கின் ஃபீனிக்ஸ்) பேரனாக வந்த சிறுவன் லூசியஸ் (பால் மெஸ்கல்), ரோம் நாட்டிலிருந்து தன்னுடைய தாயால் தொலைதூர நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கு வாழ்ந்து வருகிறார். ஆனால் சூழல் அவரை மீண்டும் ரோமுக்கு ஒரு கிளாடியேட்டராக கொண்டு வருகிறது.
இன்னொருபுறம் ரோமில் முந்தைய பாகத்தின் ஹீரோ மேக்ஸிமஸிடம் பயிற்சி பெற்ற மார்கஸ் அசாசியஸ் (பெட்ரோ பாஸ்கர்) இருக்கிறார். இருவரும் பிரம்மாண்ட கொலோஸியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றனர். இதுதவிர ட்ரெய்லரில் மிகப்பெரிய யுத்தமும் வருகிறது. பழிவாங்கல், அதிகாரத்துக்கான யுத்தம், ரத்தம், வன்முறை என செல்லும் ட்ரெய்லர் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.
இந்த இருவர் தவிர படத்தில் டென்ஸல் வாஷிங்டன், வாக்கின் ஃபீனிக்ஸ் உள்ளிட்டோரும் இருக்கின்றனர். இப்படம் வரும் நவம்பர் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.