எந்த ஒரு தொழிலும், வேலையிலும் கண்ணியம்தான் முக்கியம். இந்த திரைத் துறையிலும் கூட கண்ணியம் இல்லாத நிலை ஏற்பட்டால் இங்கிருந்து வெளியேறிவிடுவேன்” என்று நடிகை பார்வதி தெரிவித்தார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் பார்வதி திருவொத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கான புரொமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பார்வதி அளித்த பேட்டியில் தனது முதல் தமிழ்ப் படமான ‘பூ’ குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “பூ படம் நடித்தபோது எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது. புரியவும் செய்யாது. தினமும் நான் ‘மாரி’ கதாபாத்திரத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக உணவு இடைவேளையில் ’பூ’ படத்தின் மூலமான ‘வெயிலோடு போய்’ சிறுகதையை எனக்கு இயக்குநர் சசி வாசித்து காண்பிப்பார். தமிழ் புரியவில்லை என்றாலும் எனக்கு அது தாலாட்டு போல இருக்கும்.
சினிமாவுக்கு வரவில்லை என்றால் நான் டீக்கடை வைத்திருப்பேன். எந்த ஒரு தொழிலும், வேலையிலும் கண்ணியம்தான் முக்கியம். இந்த திரைத் துறையிலும் கூட கண்ணியம் இல்லாத நிலை ஏற்பட்டால் இங்கிருந்து வெளியேறிவிடுவேன்” இவ்வாறு பார்வதி தெரிவித்தார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ளார்.