வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு குறித்து நடிகர் சூர்யா கவலை தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளில் குடும்பங்களுக்கு உதவி செய்யும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் களத்தில் உள்ள மக்களுக்கும் என்னுடைய வணக்கங்கள் என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சூர்யா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இதயம் நொறுங்குகிறது. மீட்பு நடவடிக்கைகளில் குடும்பங்களுக்கு உதவி செய்யும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் களத்தில் உள்ள மக்களுக்கும் என்னுடைய வணக்கங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளநீர் பாய்ந்ததால் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த வீடுகளை மூடியது. டன் கணக்கிலான மண் சேறும் சகதியுமாக மூடியதில், அந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்த இயற்கை பேரிடர் பாதிப்பை அடுத்து, 2வது நாளாக இன்றும் (புதன்கிழமை) மீட்புப் பணிகளில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளில் ஈடுபட கேரளாவில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் வந்தாலும் கூட நிபுணத்துவம், அனுபவம் நிறைந்தவர்கள் மட்டுமே மீட்புப் பணியில் அனுமதிக்கப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. ராணுவம் சார்பில் வயநாட்டை எளிதில் அடைய தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.