நானி, நாயகனாக நடித்துள்ள படம், ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’. விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் உட்பட பலர் நடித்துள்ளனர். டிவிவி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் டிவிவி தனய்யா, கல்யாண் தாசரி தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வரும் 29-ம் தேதி வெளியாகும் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அதில், எஸ்.ஜே.சூர்யா கூறியதாவது: இதுவரை பல ஆக்ஷன் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அனைத்துக்கும் அடிப்படை, மாணிக்கம்- பாட்ஷாதான். ‘பாகுபலி’ படத்திலும் இந்த அடிப்படைதான் இருந்தது.
இந்தப் படத்தில் இதே ஃபார்முலாவில் வித்தியாசத்தைப் புகுத்தி இருக்கிறார் இயக்குநர். ஒருவன் அதீத கோபக்காரன். அவனது அம்மா ‘கோபப்படாதே’ என்றால் கேட்பதாக இல்லை. அதனால், ‘வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் கோபப்படு’ என்கிறார். நாயகன் ஞாயிறு முதல் வெள்ளி வரை கோபப்படாமல் மாணிக்கமாக இருப்பார். சனிக்கிழமை மட்டும் பாட்ஷாவாக மாறுவார். இதுதான் கான்செப்ட்.
இதில் எனக்கும் கோபம் இருக்கிறது. இந்த இரண்டு கோபமும் ஒரு புள்ளியில் மோதினால் என்னநடக்கும் என்பது தான் கிளைமாக்ஸ். அனைத்து ரசிகர்களையும் கவரக்கூடிய படம் இது. இவ்வாறு எஸ்.ஜே. சூர்யா பேசினார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.