தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறான் சிறுவன் சிவனணைந்தான் (பொன்வேல்). அவன் வாழ்க்கையில் வெறுக்கும் ஒரே விஷயம் வாழைத்தார் சுமப்பது. வறுமையான குடும்பம், அப்பா இல்லை, வாங்கிய கடனை அடைத்தாக வேண்டும் என்பதற்காக தாயின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும் துயரத்துடன் வாழைத்தார்களை சுமக்க செல்கிறான். அதனால் இரவில் வலியால் துடிக்கிறான். வாழைத்தார் சுமக்கும் அவனது ‘கனமான’ வாழ்க்கையை இலகுவாக்குவது பூங்கொடி மிஸ் (நிகிலா விமல்). இப்படியாக கறுப்பு பக்கங்களும், நடுவே சில ‘கலர்ஃபுல்’ பக்கங்களும் சிவனணைந்தான் வாழ்க்கையை ஆட்கொள்கின்றன.
இதனிடையே, அதே ஊரில் வாழைத்தார் சுமக்கும் கனி (கலையரசன்) ஊதிய உயர்வு கேட்டு ஆட்களை திரட்டி போராடுகிறார். ஒருவகையில் அதற்கு ஒப்புக்கொள்ளும் முதலாளி, மற்றொருபுறம் ஆபத்தில் சிக்க வைக்கிறார். அது என்ன? சிவனணைந்தானுக்கு வாழை சுமப்பத்திலிருந்து விடுதலை கிடைத்ததா என்பது திரைக்கதை.
தன் வாழ்வின் உச்சபட்ச அழுகையின் தருணங்களையும், மகிழ்ச்சியின் நினைவுகளையும் ஒரு சேர கோத்து ‘உணர்வுபூர்வமான’ படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். சொற்ப கூலிக்காக, உயிர்கொடுத்து வாழைத்தாரை சுமந்து செல்லும் அம்மக்களின் வாழ்வியலையும், அது சிறுவனின் உளவியலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சமரசமின்றி அழுத்தமாக பதிவு செய்கிறது படம். அதேசமயம் கண்ணீர் மழையை பொழியும் காட்சிகளை உருக்கி உருக்கி வடிக்காமல், வெகுஜன ரசனையை ஈர்க்கும் படத்தின் திரைமொழி கவனம் பெறுகிறது.
சிவனணைந்தான் மற்றும் அவனது நண்பனுக்கு இடையிலான நட்பு, ரஜினி, கமல் ரெஃபரன்ஸ், “நம்மூர்ல ரஜினி படம் தான் ஓடுது. கமல் படம் எங்க ஓடுது” என்ற வசனம், அதையொட்டிய காட்சிகள், ‘பூவே உனக்காக’, ‘பிரியமுடன்’ போஸ்டர்கள், கர்சீஃப் காட்சி என ஜாலியாக நகரும் படத்தின் தொடக்கம் ரசிக்க வைக்கிறது. தனக்கு பிடித்த ஆசிரியை மீது அந்தப் பருவத்தில் விளையும் ஈர்ப்பை எந்த வகையிலும், கொச்சையாகவோ, மிகைப்படுத்தியோ சொல்லாமல் மிக கவனமாக நேர்த்தியாக கையாண்டியிருப்பது பாராட்டுக்குரியது. நிகிலா விமலிடம், மாணவன், “நேத்து எங்க அம்மா மாதிரி அழகா இருந்தீங்க டீச்சர். இன்னைக்கு அக்கா மாதிரி” என சொல்லும் வசனம் அழகு! இதற்கு மறுபுறம், மற்றொரு காதலையும், மெல்லிய உணர்வுடன் 2 ரெட்ரோ பாடல்களின் வழியே கடத்தியிருந்தது அட்டகாசமான திரையனுபவம்.
கொத்தடிமை வாழ்க்கை, ஒரு ரூபாய் கூலி உயர்வு போராட்டம், அதனால் ஏற்படும் இழப்பு, இடைத்தரகர்களின் வஞ்சகம், கம்யூனிஸ்ட், அம்பேத்கர் குறியீடுகள் என உழைக்கும் மக்களின் வலியை அழுத்தமாக பதிய வைக்கிறது படம். எல்லாவற்றையும் தாண்டி கட்டிப்போட்டு உலுக்கும் இறுதிக் காட்சியின் தாக்கத்தை படம் முடிந்தும் உணர முடிகிறது. மாரி செல்வராஜின் ‘உருவக’ காட்சிகளின் டச் இப்படத்தில் நிறைந்திருக்கிறது.
தேர்ந்த கலைஞர்கள் கூட தோற்றுப்போகும் அளவுக்கு, வலி, வேதனை, கண்ணீர், தாயிடம் கெஞ்சி மன்றாடுவது, களைப்பினால் சோர்ந்து வீழும் இடம் என உணர்வுகளை நடிப்பில் வரித்து மிரட்டியிருக்கிறார் சிறுவன் பொன்வேல். உற்ற தோழனாக, டைமிங்கிலும், யதார்த்தமான நடிப்பிலும் ஈர்க்கிறார் மற்றொருவர் சிறுவன் ராகுல். பால்ய கால ஆசிரியரை நினைவூட்டும் நிகிலா விமல், க்ளோசப் ஷாட்களில் முகத்தில் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி, இனம்புரியா உணர்வுகளைக் கொண்ட சிறுவனை ‘ஹேண்டில்’ செய்யும் முறையில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
ஆக்ரோஷமான இளைஞனாக கூலிக்காக போராடும் கலையரசன், வாழைத்தாரை தாங்குவது போல கதாபாத்திரத்தை நேர்த்தியாக தாங்கி கிராமத்து பெண்ணாக ஈர்க்கும் திவ்யா துரைசாமி கச்சிதமான தேர்வு. சிறுவனின் தாயாக நடித்துள்ள ஜானகி இறுதிக்காட்சியில் அட்டகாசமான நடிப்பால் பாரத்தை இறக்கிவிடுகிறார். அவருக்கு தனி பாராட்டுகள்!
கமல் குறித்து பேசும் காட்சியில், ‘நாயகன்’ பட இசையை மெல்லிதாக ஓட விடுவது, உருக்கமான காட்சிகளுக்கு உயிரூட்டி உணர்வுகளாக்கியிருப்பது, தேவையான இடங்களில் அமைதியின் வழியே அழுத்தம் சேர்ப்பது என சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் மிரட்டுகிறார். ‘தென்கிழக்கு தேன் சிட்டு’, ‘பாதவத்தி’ பாடல்கள் சிறப்பு. கறுப்பு வெள்ளையிலும், ஷில்அவுட்டிலும் காட்சிகளை நனைத்து, மூச்சிறைக்க ஓடும் சிறுவனின் உணர்வுகளை கடத்தி, மாரி செல்வராஜின் நினைவுகளுக்கு உயிரூட்டுகிறது தேனி ஈஸ்வரின் கேமரா. ஒலிக்கலை நேர்த்தி.
பொறுமையாக நகரும் கதை தான் என்றாலும் எங்கேயும் அயற்சி ஏற்படுத்தாமல் சுவாரஸ்யமாக கடப்பது பலம். மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் காட்சிகள் சுற்றுவதாக சிலருக்கு தோன்றலாம். வெறும் வலியை மட்டும் திணித்து கடத்தாமல், வெகுஜன ரசனையிலும், திரை அனுபவத்திலும் கவனம் செலுத்தியிருக்கும் உன்னதமான இப்படம் இறுதியில் உங்களை ஆட்கொள்ளும்.