தோல் பாவைகள், தெருக்கூத்து, மேடை நாடகம், டூரிங் டாக்கீஸ் என பொதுமக்களின் பொழுதுபோக்குத் தேவை படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று கையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வந்து நிற்கிறது. பொழுதுபோக்கை நாம் தேடிப் போன காலம் போய் இன்று பொழுதுபோக்குகள் நம்மைத் தேடி வந்துவிடுகின்றன.
கீற்றுக் கொட்டகையில் திரை கட்டி படம் பார்த்தது முதல் இன்று பல அடுக்க கட்டிடங்களைக் கொண்ட மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்கள், ஓடிடி தளங்கள் என சினிமாவும் பல படிநிலைகளை கடந்து வந்து நிற்கிறது. ஒரு 10,15 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடும்பங்களின் வார இறுதிக் கொண்டாட்டம் என்றாலே சினிமா தியேட்டர்தான் என்ற நிலைதான் இருந்து வந்தது.
ஆனால் அதெல்லாம் சினிமா மட்டுமே பிரதான பொழுதுபோக்கு என்ற நிலை இருந்தவரை தான். ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பிறகு திரையரங்குகளுக்குச் செல்லும் மனநிலை மெல்ல குறைந்த நிலையில், கரோனா காலகட்டத்துக்குப் பிறகு ஓடிடி தளங்களில் ஏற்பட்ட திடீர் எழுச்சி, கிட்டத்தட்ட திரையங்கம் செல்லும் மக்களின் ஆர்வத்தை அடியோடு மாற்றிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் காலம்காலமாக திரையரங்க தொழிலில் கோலோச்சியவர்கள் எல்லாம் கரோனாவுக்கு காணாமல் போன, இப்போதும் போய்க் கொண்டிருக்கிற நிலையை கண்கூடாக செய்திகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பல திரைகள் கொண்ட மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்களே திணறிக் கொண்டிருக்கும் இப்படியான காலகட்டத்தில் சென்னையில் வெறும் ஒரு திரையை கொண்டு கால ஓட்டத்தில் காணாமல் போகாமல் நிலைத்திருக்கும் ‘சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள்’ பற்றி இங்கு பார்க்கலாம்:
கேசினோ: சென்னையின் மிக பழமையான திரையரங்குகளில் ஒன்று. 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 75 ஆண்டுகளைக் கடந்து இன்றும் உயிர்ப்போடு இயங்கி வரும் இந்த தியேட்டர் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. ‘It turned out nice again’ என்ற படம் தான் இங்கு திரையிடப்பட்ட முதல் படம். ஆங்கிலப் படங்களுக்கு பேர் போன இந்த திரையரங்கு தற்போது புதுப்பிக்கப்பட்டு ஒற்றை திரையுடன் இன்றும் செயல்பட்டு வருகிறது.
அண்ணா தியேட்டர்: சென்னை அண்ணா சாலையின் பிரதான பகுதியில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் ஒருகாலத்தில் சென்னையின் முக்கிய தியேட்டர்களின் ஒன்று. 70களில் எம்ஜிஆர், சிவாஜி, 80களில் ரஜினி,கமல் நடித்த ஏராளமான படங்கள் இங்கு 100 நாள் விழா கொண்டாடின. தற்போது புதிய ஒலி/ஒளி அமைப்புடன் புதுப்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது.
பரங்கிமலை ஜோதி: சென்னையின் மிக பிரபலமான திரையரங்குகளில் ஒன்று. 1971 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை சினிமா ரசிகர்களின் ஆஸ்தான திரையரங்குகளில் ஒன்றான இங்கு, தமிழ், இந்தி, ஆங்கிலம் என பல படங்கள் வெற்றிவிழா கண்டுள்ளன.
கிருஷ்ணவேணி: பரபரப்புக்கு பேர்போன தியாகராய நகரில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் 1964ல் தொடங்கப்பட்டது. சென்னையின் மற்றொரு பிரபல திரையரங்கான கமலா தியேட்டரின் உரிமையாளரான வி.என்.சிதம்பரம் செட்டியாரிடம் இருந்து 1968ல் இதனை எஸ்.எம்.ராமநாதன் செட்டியார் வாங்கினார். கடந்த 2021ல் புதுப்பிக்கப்பட்டு இங்கு படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
பாரத் தியேட்டர்: பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இந்த திரையரங்கத்தின் வரலாறு ஐந்து தசாப்தங்களை கடந்தது. 1950ல் தொடங்கப்பட்ட இந்த தியேட்டர் 60,70களில் சென்னையில் அதிக ரசிகர்களை ஈர்க்கும் திரையரங்காக விளங்கியது. சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’, ‘புது வசந்தம்’, ‘சின்ன தம்பி’, ‘அண்ணாமலை’ என பல படங்கள் இங்கு நூறு நாட்களைக் கடந்து ஓடின.
வெல்கோ சினிமாஸ்: பல்லாவரம் அருகே உள்ள பம்மலில் அமைந்திருக்கும் இந்த தியேட்டர் 1968ல் தொடங்கப்பட்டது. இந்த தியேட்டரில் உச்சகட்ட காலகட்டம் என்றால் அது 70 மற்றும் 80-கள்தான். ‘பாரதவிலாஸ்’, ‘16 வயதினிலே’ உள்ளிட்ட படங்கள் இங்கு நூற்றி ஐம்பது நாட்களை ஓடியது குறிப்பிடத்தக்கது.