உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக கடந்தகால மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்படுமா எனவும், இந்த ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடு உள்ளதா எனவும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகப் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (26) கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இடைக்கால செயலகத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச மற்றும் கொள்கைப்பிரிவுத்தலைவர் கலாநிதி யுவி தங்கராஜா ஆகியோர் உள்ளடங்கலாக அறுவர் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் அதன் பணிகள் குறித்து இடைக்கால செயலகத்தின் பிரதிநிதிகள் அமெரிக்கத்தூதுவருக்கு எடுத்துரைத்தனர்.
அதனை செவிமடுத்த தூதுவர் ஜுலி சங், இலங்கையில் கடந்த காலங்களில் நிறுவப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு முற்படல், வட, கிழக்கு மாகாணங்களில் படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என அப்பகுதி மக்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக கடந்தகால மீறல்கள் குறித்து பொறுப்புக்கூறவேண்டியவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
அவற்றுக்குப் பதிலளித்த இடைக்கால செயலகப் பிரதிநிதிகள் மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வரையறுக்கப்பட்ட அளவிலான ஆணை குறித்தும், அவை சார்ந்து தாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமளித்தனர்.
அதேவேளை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உத்தேசித்திருக்கும் காலப்பகுதி மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடு குறித்து அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த இடைக்கால செயலக அதிகாரிகள், எவ்வாறெனினும் தேர்தல் முடிவடைந்ததன் பின்னரே அச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், இருப்பினும் அது நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடு குறித்து தம்மால் உறுதியாக எதனையும் கூறமுடியாது எனவும் தெரிவித்தனர்.