இலங்கை மக்களுக்கு முக்கியமான தேர்தல்

அறகலய போராட்டம், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கை மக்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாக காணப்படுகின்றது. தேர்தல் கண்காணிப்பில் எவ்வித மறைமுக நிகழ்ச்சி நிரலும் எங்களுக்கு கிடையாது என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைவரும் ஸ்பெயின் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினருமான நாச்சோ சான்செஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் இலங்கைக்கான தேர்தல் கண்காணிப்பு விஜயம் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைவரும் ஸ்பெயின் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினருமான நாச்சோ சான்செஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை தேர்தல் ஆணைக்குழு மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் தேர்தல் செயன்முறைகளுடன் இணைந்து செயலாற்றுவதில் ஐரோப்பிய ஒன்றியம் நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளது. இலங்கையில் இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்ததுடன் இதற்கு முன்னர் 6 தடவைகள் இலங்கைக்கு எமது குழு வந்துள்ளது. ஜனநாயக சென்முறைகள் மற்றும் கூட்டாண்மை சார்ந்த விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கின்றது.

இலங்கையின் ஜனநாயக செயல்முறைக்கு ஆதரவு அளிப்பதுடன் தேர்தல் செயல்முறையில் மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தல் மற்றும் மனித உரிமைகள், சட்ட ஆட்சியின் மதிப்பதை வலுப்படுத்துவதே ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணியின் முக்கிய நோக்கங்களாகும்.

அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிக்காக 10 நிபுணர்களைக் கொண்ட பிரதான தூதுக்குழுவினர் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தனர். அத்துடன் நீண்டகால கண்காணிப்புக்காக 26 கண்காணிப்பாளர்கள் தேர்தல் செயன்முறைகளை கண்காணிப்பதற்காக ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு பணிகளை ஆரம்பித்தல், வாக்களித்தல், வாக்குகளை எண்ணுதல் மற்றும் முடிவுகளை அட்டவணைப்படுத்தல் ஆகியவற்றைக் கண்காணிக்க 32 குறுங்கால கண்காணிப்பாளர்கள் கடமைகளில் ஈடுபடுவார்கள்.

இதற்கு மேலதிகமாக ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து நியமிக்கப்படும் குறுங்கால கண்காணிப்பாளர்கள் தேர்தல் தினத்தன்று மேலதிக உதவிகளை வழங்குவார்கள்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் தேர்தல் செயன்முறை நிறைவடையும் வரை இலங்கையில் தங்கியிருந்து தங்களது கடமைகளை மேற்கொள்வார்கள்.

இம்முறை இடம்பெறும் தேர்தலின் போது சட்டக் கட்டமைப்பு மற்றும் அதன் அமுலாக்கம், தேர்தல் நிர்வாகத்தின் செயலாற்றுகை, அரச நிறுவனங்களின் பங்களிப்பு, வாக்காளர் பதிவு எண்ணிக்கை, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி, அடிப்படைச் சுதந்திரம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் கௌரவம் உள்ளிட்ட தேர்தல் கால ஒட்டுமொத்த கள நிலைவரங்கள், தேர்தலின் போது பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பு, இணையவழி தகவல் மூலங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட ஏனைய ஊடகங்களின் பங்கு, சிவில் சமூகத்தின் பங்களிப்பு, வாக்களிப்பு, வாக்குகளை எண்ணுதல் மற்றும் அட்டவணைப்படுத்தல், முறைப்பாடுகள் மற்றும், மேற்முறையீட்டு செயன்முறைகள், தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் செயற்பாடுகள் உள்ளிட்ட தேர்தல் செயன்முறையின் அனைத்து அம்சங்களையும் நடைமுறைக் கட்டங்களையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு தூதுக்குழுவினர் மதிப்பீடுகளை மேற்கொள்வர்.

இலங்கையின் தேசிய சட்டமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்தல்கள் தொடர்பாக இலங்கை ஏற்றுள்ள சர்வதேச மற்றும் பிராந்திய தர நியமங்களின்படி ஜனாதிபதித் தேர்தலை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு கண்காணிக்கும்.

தேர்தல் செயற்பாடுகளில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தலையிடமாட்டார்கள். நடுநிலை மற்றும் பாரபட்சமற்ற தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் நடத்தை நெறிமுறைகளையும் நெறிமுறைசார்ந்த வழிகாட்டுதல்களையும் கண்டிப்பான முறையில் பின்பற்றுவதற்கான கடப்பாட்டினை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் கொண்டுள்ளனர்.

2005 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு உலகளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுகின்ற 50 க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புக்களால் கைச்சாத்திட்டுள்ள “ சர்வதேச தேர்தல் கண்காணிப்புக்கான கோட்பாடுகள் பற்றிய பிரகடனம் ” இற்கு அமைவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு செயற்படுகின்றது.

இதேவேளை, தேர்தல்களை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிறுவப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு அமைவாக செயற்பட்டு ஒட்டுமொத்த தேர்தல் செயன்முறை சார்ந்த முழுமையான மற்றும் பாரபட்சமற்ற பகுப்பாய்வை எமது தூதுக்குழு முன்வைக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு நடைமுறைகளுக்கு அமைவாக எமது தூதுக்குழு பூர்வாங்க அறிக்கையொன்றை தயாரித்து அதனை வெளியிட்டு தேர்தல் நிறைவடைந்து இரு தினங்களுக்குப் பின்னர் கொழும்பில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்துவோம்.

அத்துடன் ஒட்டுமொத்த தேர்தல் செயன்முறை நிறைவடைந்த பின்னர் எதிர்கால தேர்தல் செயல்முறைகளுக்கான பரிந்துரைகளின் தொகுப்பை உள்ளடக்கிய இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உரியவர்களுக்கு பகிரப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts