சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல்

சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும் என தமிழ் தேசிய கட்டமைப்பின் ஐனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வெளியடப்பட்டது.

இதன்போது உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்;

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தமிழ்மக்களிடையே பெரும் ஆதரவு பெருகிவருகிறது. அதை பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர். சிலர் எரிச்சல் படுகின்றனர். சிலர் எச்சரிக்கை செய்கின்றனர்.
அவ்வாறானவர்களை சிரிப்போடு கடந்து செல்வோம். அவர்களின் பெயர்களை கூறி அவ்வாறானவர்களை பிரபல்யப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தவறுகள் என்பது எல்லோரிடமும் இருக்கின்றது.
தவறு இழைத்தவர்கள் அத்தனைபேரும் வருகின்ற 22 ஆம் திகதி தமிழ் மக்கள் அளிக்கும் முடிவைப்பார்த்து திருந்துவார்கள்.

சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும்.
ஒன்றிணைந்த வட கிழக்கில் தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வுக்காக பலரும் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
அதை நோக்கியதான தமிழ்ப்பொது வேட்பாளர் நிலைப்பாட்டை வெற்றிபெற வைப்பதற்காக தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிப்பவர்களும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களும், புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் உறவுகள் என பலவேறு தரப்பினரும் இரவு பகலாக பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

சில கட்சிகள் பொது வேட்பாளரை ஆதாரிக்காவிடில் அது செய்தி அல்ல. சங்கை ஆதரித்தால் அதுதான் செய்தி 21 ஆம் திகதிக்கு இடைபட்ட நாட்களில் பல்வேறு கதைகள் வரும்.
வதந்திகள் வரும். மக்கள் அவை எதையும் பொருட்படுத்தாது சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தவறிழைப்பவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்.
முடிவு எவ்வாறு அமையும் என எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

எஞ்சி இருக்கும் 15 நாட்களுக்குள் தவறான முடிவெடுத்தவர்கள் திருந்திவரவேண்டும்.
தந்தை செல்வநாயகத்தின் கொள்கைக்காக தமிழரசுக் கட்சியில் இணைந்து செயற்பட்டுவரும் நான் அந்த கொள்கைக்காகவே தமிழ்த் தேசிய பொதுக்கடமைப்பின் அழைப்பை ஏற்று தமிழ்ப் பொதுவேட்பாளராக இந்த தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றேன்.
இதனை உணர்ந்துகொண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழர் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்

Related posts