‘வாழை’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “மாரி செல்வராஜ் உடைய ‘வாழை’ படம் பார்த்தேன்.
ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிறது.
மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்துக்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார்.
அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.
மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார்.
மாரி செல்வராஜுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்” இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.
ரஜினியின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்து பதிலளித்துள்ள மாரி செல்வராஜ், “அன்று பழைய தகரப்பெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களை தேடி தேடி சேகரித்து வைத்த அந்த சிறுவனின் கனவுக்குள்ளிருந்து அவனின் பிஞ்சு விரல்களை கொண்டே எழுதி சொல்கிறேன் .
உங்கள் வாழ்த்துக்கும் அரவணைப்புக்கும் நன்றிகள் எங்கள் சூப்பர் ஸடார் அவர்களே!” என்று தெரிவித்துள்ளார்.