வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகளின் முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவு: “ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பாதிப்புகளை அறிந்து வருத்தமடைந்தேன். இந்த சவாலான நேரத்தில் நிவாரண பணிகளுக்கு உதவியாக இரு மாநில முதல்வர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1 கோடியை நிவாரண நிதியாக வழங்குகிறேன். அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்” என பதிவிட்டுள்ளார்.
உதவிக்கரம் நீட்டிய திரையுலகம்: வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இரு மாநில முதல்வர்கள் நிவாரண நிதிக்கு நடிகர்கள் பாலகிருஷ்ணா ரூ.1 கோடி, ஜூனியர் என்டிஆர் ரூ.1 கோடி நிவாரண நிதியை வழங்கியுள்ளனர். அதேபோல், நடிகர் சித்து ஜொன்னலகட்டாவும் இரு தெலுங்கு மாநிலங்களுக்கும் தலா ரூ.15 லட்சம் வீதம் ரூ.30 லட்சமும், நடிகர் விஷ்வக் சென் ரூ.10 லட்சமும் நிதியுதவியை வழங்கி உள்ளனர். வைஜெயந்தி மூவிஸ் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளது. மகேஷ் பாபு ரூ.1 கோடியை நிவாரண நிதி வழங்கியுள்ளார். நடிகர் பிரபாஸ் இரு மாநிலங்களுக்கும் தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் 2 கோடி வழங்கியுள்ளார். மேலும் சிரஞ்சீவி ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா, தெலங்கானா கனமழை: ஆந்திரா, தெலங்கானாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. மழை காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவர்கள் செயலிழந்துவிட்டன. விஜயவாடா மாவட்டத்தைச் சேர்ந்த பல லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கனமழை, வெள்ளம் காரணமாக இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பலர் காணாமல் போயுள்ளனர். மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.