நடிகர் பட்டாளம், சர்ப்ரைஸ் அணிவகுப்பு மட்டும் போதுமா?

இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் என்று சொல்வதை விட, படக்குழுவினரே ஒவ்வொரு பேட்டியிலும் வித்தியாச வித்தியாசமாக ‘ஹைப்’ ஏற்றி எதிர்பார்ப்பை எகிற வைத்த படம் என்று இதனைச் சொன்னால் சரியாக இருக்கும். டீஏஜிங் தொழில்நுட்பம், பல்வேறு சர்ப்ரைஸ் அம்சங்கள் என விளம்பரப்படுத்தப்பட்ட ‘தி கோட்’ படம் ஏற்றிவிடப்பட்ட ‘ஹைப்’-க்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம்.

மும்பையில் தீவிரவாத ஒழிப்புக் குழுவில் ரகசியமாக செயல்பட்டு வருகிறார்கள் காந்தி (விஜய்), சுனில் (பிரசாந்த்), கல்யாண சுந்தரம் (பிரபுதேவா). படத்தின் தொடக்கத்தில் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராஜீவ் மேனனை (மோகன்) தேடி மூவரும் கென்யாவுக்குச் செல்கின்றனர். ஆனால் அங்கு நடக்கும் சண்டையில் மேனன் தப்பிவிடுகிறார். அவர் சென்ற ரயிலும் வெடித்துச் சிதறி விடுகிறது.

மற்றொரு மிஷனுக்காக தாய்லாந்து செல்லும் காந்தி, கூடவே எதற்காக செல்கிறோம் என்று சொல்லாமல் 2-வது ஹனிமூன் என்று கூறி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவி அனுராதா (சினேகா), 5 வயது மகன் ஜீவனையும் கூட்டிச் செல்கிறார். அங்கு அடையாளம் தெரியாத எதிரிகளால் மகன் ஜீவன் கடத்தி கொல்லப்படுகிறான். இந்தச் சம்பவம் காந்தியில் தனிப்பட்ட வாழ்விலும், தொழில் வாழ்விலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதன்பிறகு அவரது வாழ்க்கையில் சில அதிரடியான திருப்பங்களும் நடக்கின்றன. அவை என்னென்ன? அவற்றைத் தொடர்ந்து கதை எங்கே சொல்கிறது என்பதே ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) திரைக்கதை.

படம் தொடங்கிய முதல் நொடியிலிருந்தே ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்களும் தொடங்கிவிடுகின்றன. அல்லது சர்ப்ரைஸ்களுடன் தான் படமே தொடங்குகிறது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு படம் முழுக்க கூஸ்பம்ப்ஸ் ரக சர்ப்ரைஸ்களும், கேமியோக்களையும் அள்ளித் தெளித்துள்ளார் வெங்கட் பிரபு. இது போன்ற கேமியோக்களையும், ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைக்கும் ஆச்சரியங்களையும் மார்வெல் படங்களில் மட்டுமே பார்த்துப் பழகிய நம் ஊர் ரசிகர்களுக்கு இவை மிகச் சிறந்த திரையரங்க அனுபவத்தை தரக்கூடும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், வெறும் சர்ப்ரைஸ்களின் அணிவகுப்புகள் மட்டுமே ஒரு நல்ல சினிமாவை எப்படி தீர்மானிக்க முடியும்? ‘மிஷன் இம்பாசிபிள்’ போன்ற ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்டது சரி. ஆனால் அதில் இருக்கும் லாஜிக் மீறல்களையும் எந்தவித உறுத்தலும் இன்றி ஏற்றுக் கொள்ளும் வகையில் ‘ஷார்ப்’ ஆன திரைக்கதையுடன் கொடுத்தால் மட்டுமே திரையில் அது எடுபடும். இதே வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நாயகன் ‘செத்து செத்து பிழைப்பதை’ கூட ஆடியன்ஸ் எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொண்டதற்கு காரணம், நல்ல வலுவான திரைக்கதைதான். அது இங்கே மிஸ்ஸிங்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் ரயில் காட்சி தொழில்நுட்ப ரீதியாகவும், படமாக்கப்பட்ட விதமும் தரம். ஒரு மாஸ் கமர்ஷியல் படத்துக்கான பக்காவான இன்ட்ரோ காட்சி அது. அதன் பிறகு தமிழ் சினிமாவின் வழக்கப்படி ஓபனிங் சாங் முடிந்து விஜய் – சினேகா இடையிலான காட்சிகள், தொடர்ந்து விஜய், பிரசாந்த், பிரபுதேவா இடையிலான காட்சிகள் எல்லாம் எந்த ஒட்டுதமும் இன்று நகர்கின்றன.

கணவன் மீது சந்தேகப்படும் சினேகாவிடம் இருந்து பிரபுதேவாவும், பிரசாந்த்தும் காப்பாற்றும் காட்சிகள் எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பட்டிமன்றங்களில் சொல்லப்பட்டவை. மூன்று நண்பர்களுக்கு இடையில் வரும் காமெடி என்று வைக்கப்பட்டவை படு ‘கிரிஞ்சு’ ரகம். எமோஷனல் காட்சிகளும் பெரிதாக கைகொடுக்கவில்லை. அதேபோல படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் விஜய்யை புகழ்ந்து தள்ளுகின்றன. ஒய்.ஜி.மகேந்திரன் கூட ஒரு காட்சியில் ‘லயன் இஸ் ஆல்வேஸ் எ லயன்’ என்கிறார். அப்படி சொல்லும் அளவுக்கு விஜய் படத்தில் என்ன செய்தார் என்பதற்கான நியாயம் எதுவும் இல்லை.

இரட்டை வேடங்களில் விஜய் நடிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு படத்தை தாங்கிப் பிடிக்கிறார். படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும் தன்னுடைய தனித்துவத்தை தவறவிடாமல் மிளிர்கிறார். எனினும் வயதான தோற்றத்தில் அவரது மேக்கப்பில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். ஒட்டாத ஒட்டுதாடியுடன் வசனங்களை பேசவே சிரமப்படுவது போல தோன்றுகிறது. இளமையான கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் தோற்றம் ட்ரெய்லரில் இருந்ததை விட படத்தில் மெருகேற்றப்பட்டு சிறப்பாகவே வந்திருக்கிறது.

பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, ஜெயராம், மோகன் ஆகியோரும் கதைக்கு தேவையான கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளனர். லைலா ஓரிரு காட்சிகளே வருகிறார். பிரேம்ஜி சில காட்சிகள் வந்து கிச்சுகிச்சு மூட்ட முயற்சிக்கிறார். மீனாட்சி சவுத்ரிக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை என்றாலும் எமோஷனல் காட்சிகளில் ஈர்க்கிறார். வைபவ், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் சும்மா வந்து செல்வதோடு சரி.

படத்தின் ஆரம்பத்தில் பிரம்மாண்ட எழுத்துகளுடன் யுவன் சங்கர் ராஜா இசை என்று போடுகிறார்கள். அதோடு சரி, அதன் பிறகு படத்தில் எந்த இடத்திலும் யுவன் தெரியவில்லை. பாடல்களிலும், பின்னணி இசையிலும் எந்தவித புதுமையும் இல்லை. சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவு ஆக்‌ஷன் படத்துகே உரிய ‘டோனை’ சிறப்பாக தந்திருக்கிறது. படத்தின் கண்ணுக்கு தெரியாத ஹீரோ என்று ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயனை தாராளமாக சொல்லலாம். அந்த அளவுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் தெறிக்கின்றன.

கொஞ்சம் கூட யோசிக்காமல் பாடல்கள் உட்பட தேவையே இல்லாத 20 நிமிட காட்சிகளை எடிட்டர் விக்னேஷ் ராஜன் கத்தரித்திருக்கலாம். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் ‘ஸ்பார்க்’ பாடல் வைக்கப்பட்ட இடம் படு அபத்தம். இத்தனைக்கும் அந்தப் பாடல் கேட்கும்படி கூட இல்லை. இணையத்தில் வெளியாகி இவ்வளவு எதிர்வினைகளை பெற்றபிறகும் அந்தப் பாடலை ஒரு முக்கியமான காட்சியின் நடுவே ஸ்பீடு பிரேக்கரைப் போல வைக்க ஒரு முரட்டுத்தனமான தைரியம் வேண்டும்.

ட்விஸ்ட் என்று வைக்கப்ட்ட ஒரு காட்சியும், அதற்கான பின்னணியும் மிகப் பெரிய லாஜிட் ஓட்டை. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்ட விதம் சிறப்பு. ஒரு பக்கம் கமென்ட்ரி, அதற்கு ஏற்ப இன்னொரு பக்கம் ஆக்‌ஷன் காட்சி என்று யோசித்த வெங்கட் பிரபுவை பாராட்டலாம். க்ளைமாக்ஸுக்கு முன்பு ஒரு கேமியோ வருகிறது. சினிமாவில் தனக்குப் பிறகு தன்னுடைய இடம் யாருக்கு என்பதை அந்தக் காட்சியில் விஜய் மிக ஓபனாகவே அறிவித்திருக்கிறார். ’இளைய’ தளபதிக்கு வாழ்த்துகள்.

வெங்கட் பிரபு படம் என்றாலே ஜாலியான அம்சங்கள் நிறைந்திருக்கும் என்பதை அவரது முந்தைய படங்களை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம். இதிலும் அப்படியான விஷயங்கள் ஆங்காங்கே உள்ளன. படத்தில் வரும் கேமியோக்கள் குறித்து ஆன்லைனில் பலரும் சொல்லிவிட்டாலும், அந்தக் கதாபாத்திரங்கள் வரும் காட்சியில் அரங்கம் அதிர்கின்றது. குறிப்பாக, படத்தின் தொடக்கக் காட்சியில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வரும் ஒரு ‘முக்கியமான’ கேமியோ நிச்சயம் பரவலாக பேசப்படும்.

முன்பே குறிப்பிட்டபடி, அனுபவம் வாய்ந்த நடிகர்களின் கூட்டமும், வெறும் சர்ப்ரைஸ் கேமியோக்களால் மட்டுமே ஒரு படம் தரமான படமாகி விடாது. அதை பல ஆண்டுகளுக்கு நினைவில் ஆடியன்ஸின் மனதில் நிறுத்தச் செய்வது ஒரு நல்ல திரைக்கதை மட்டுமே. கைதட்டலுக்காக மட்டுமே வைக்கப்பட்ட கேமியோக்களுக்கும், ‘த்ரோபேக்’ நாஸ்டால்ஜியாக்களுக்கும் யோசித்ததை திரைக்கதைக்காகவும் கொஞ்சம் யோசித்திருந்தால் ஏற்றிவிட்ட ‘ஹைப்’புக்கு ஏற்றபடி ’கில்லி’யாக சொல்லி அடித்திருக்கும் இந்த ‘கோட்’.

Related posts