‘வாழை’யில் வரலாற்றை மறைத்தாரா மாரி செல்வராஜ்?

1999-ம் ஆண்டு பிப்.21-ம் தேதி வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரி ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மா நகரம் என்ற இடத்தில் வயலில் கவிழ்ந்தது. இதில் 20 தொழிலாளிகள் உயிரிழந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

‘‘இந்த விபத்துக்கு கூலி தொழிலாளர்களைஏற்றிச் செல்லும் வாகனம் அன்று வரவில்லை என்பதுதான் உண்மையான காரணம். லாரிஓட்டுநர் மது குடித்திருந்தார் என்பது மிக முக்கியமான காரணம். இந்த முழு உண்மையை ‘வாழை’ பேசவில்லை’’ என்று சமூக வலைதளங்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.

‘‘அந்த விபத்து நடைபெற்றபோது ஸ்ரீவைகுண்டம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எதேச்சையாக தன்புல்லட்டில் வந்து கொண்டு இருந்தார். அவர்தான் அந்த வழியாக வந்த லாரி ஒன்றை மடக்கி, விபத்தில் சிக்கியவர்களை அதில் ஏற்றி நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொன்னார். அந்த லாரி டிரைவர் பயத்தில் மறுக்க, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனே லாரியை ஓட் டிக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இவரையும் ‘வாழை’யில் மாரி செல்வராஜ் கூறி இருக்க வேண்டும்’’ என்று சிலர் கூறியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் பேட்மா நகர் ஃபாரூக் என்பவர் எழுதியுள்ள பதிவில், ‘‘பேட்மா நகரத்தில் இரவு தொழுகையை முடித்துவிட்டு மறைந்த, ஆபுதீன் சைக்கிள் கடையில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அந்த லாரி ஓட்டுநர் வேகமாக வந்து லாரியின் உரிமையாளருக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லிவிட்டு ஓடிவிட்டார். பிறகு எனதூர் இஸ்லாமிய சகோதரர்கள் கூட்டமாக டார்ச் லைட், பெட்ரோமக்ஸ் வரைக்கும் கொண்டு சென்று கடுமையான போராட்டத்துக்குப் பின் சிலரின் உயிரைக் காப்பாற்றி அனுப்பியதுதான் வரலாறு. ஆட்சியர், உயர் அதிகாரிகள் என பலர், உதவிபுரிந்த பேட்மாநகரம் இஸ்லாமிய மக்களின் இந்த சேவையை வாழ்த்திவிட்டுச் சென்றனர். ஆனால் மாரி செல்வராஜ், இஸ்லாமியர்கள் மற்றும் அந்த நேரத்தில் உதவிக்கு வந்த முத்துசாமிபுரம் பேரூர், தேவர் இன மக்களின் உதவியையும் உழைப்பையும் உதாசீனப்படுத்திவிட்டு, கதையில் இதைப் பற்றி காட்டாமல் வரலாறு வெளியே தெரிந்துவிடக் கூடாது என்று மிக கவனமாக கதைக்களத்தை அமைத்து படத்தை எடுத்து இருக்கிறார்.

உண்மைச் சம்பவமென்றால் உண்மையை மட்டுமே திரையில் காட்ட வேண்டும். ஒரு சமூகத்தை வஞ்சித்து வியாபார நோக்கத்துக்காக படத்தை எடுத்துவிட்டு, விளம்பரத்துக்காக நல்ல சிந்தனையுள்ள இயக்குநர் என்று எப்படி கூற முடியும்?’’ என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு வேகமாக பரவி வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உட்பட பலர் நடித்து வெளியான ‘வாழை’, வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இந்தப் படம் சர்ச்சையில் சிக்கி வருகிறது.

Related posts