உரங்களின் விலைகளை குறைப்பதாகவும் விவசாயக் கடன்கள் வெட்டிவிடுவதாகவும் அறிவிக்கும் சஜித்தும் அநுரவும் இந்நாட்டு விவசாயிகள் உரமின்றி தவிக்கும் போது எங்கே இருந்தார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.
தாம் உலகத் தலைவர்களுடன் பேசி உர மானியங்களைப் பெற்றுக்கொடுக்க பாடுபட்டதன் காரணமாகவே விவசாயியை மீண்டும் வயலுக்கு அனுப்பி நாட்டில் அரிசி உற்பத்தியை அதிகரிக்க முடிந்ததையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
இன்று மக்களின் வாழ்க்கைச் சுமை பற்றிப் பேசும் சஜித்தும் அநுரவும் கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க எவ்வித ஆதரவையும் வழங்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்கள் கஷ்டப்படும் போது ஓடியவர்களே இன்று அவர்களின் எதிர்காலத்திற்காக அதிகாரம் கேட்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (11) பிற்பகல் கல்முனை, சாய்ந்தமருது பௌசி விளையாட்டரங்கில் நடைபெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டில் முஸ்லிம்களின் பிரதான வருமானமாக இருக்கும் வர்த்தகம் மற்றும் விவசாயம் என்பன இல்லாமல் போனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும்.
எனவே இந்த நாட்டில் வியாபாரத்தையும் விவசாயத்தையும் வலுப்படுத்துவது யாரால் முடியும் என்பதை முஸ்லிம் காங்கிரஸிடம் வினவும் படி அங்கு குழுமியிருந்த மக்களிடம் கோரிய ஜனாதிபதி, தான் திட்டங்களுடனே மக்கள் முன் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இன, மத பிரச்சினைகளை முன்னிறுத்தி தேர்தலை நடத்த மாட்டோம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, முஸ்லிம் மக்களுக்கு இறந்தோரின் உடல்களை அடக்கம் செய்யும் உரிமையை சட்டத்தின் மூலம் வழங்கவுள்ளதாகவும், ஏனைய தலைவர்கள் தேர்தல் மேடைகளில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் போது, தான் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டே வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
உங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் இல்லாத வேளையில் அனைத்து தேவைகளையும் பெற்றுத் தந்தேன்.
உங்களுக்கு எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் போன வேளையில் எதிர்பார்ப்புக்களை மீட்டுத் தந்தேன். மக்களின் கஷ்டங்களை வேடிக்கை பார்ப்பது கஷ்டமானதாக இருந்தது.
வேறு எவரும் இந்த பொறுப்பை ஏற்க வராத வேளையிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் பொறுப்பை கையளித்தார்.
சஜித்துக்கும் அனுரவிற்கும் மக்களின் கஷ்டங்கள் புரியவில்லை. மக்கள் கஷ்டத்திலிருந்த வேளையில், இந்த நெருக்கடியில் கைவைக்கமாட்டோம் என்று கூறினர்.
அவர்களின் மனசாட்சி இன்று என்ன சொல்கிறது. இப்போதுதான் மக்களை பற்றி நினைவு வந்ததா?
இப்போது மக்களுக்கு நிவாரணம் தருவதாக சொல்கிறார்கள். மக்களுக்கு நிவாரணம் தேவைப்பட்ட வேளையில் அனுரவும் சஜித்தும் ஏன் அவற்றை பெற்றுக் கொடுக்கவில்லை.
ஆனால் நான் ஐஎம்எப் மற்றும் உலக தலைவர்களுடன் பேசி மக்கள் கஷ்டத்தை போக்க வழி செய்தேன்.
கடன் பெறுதல், பணம் அச்சிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஐஎம்எப் சில நிபந்தனைகளை விதித்தது.
அதன்படியே விருப்பமின்றியேனும் வரியை அதிகரித்தோம். எல்லோரும் என்னை திட்டித்தீர்த்தனர்.
ஆனால் ஆறு மாதங்களில் நாட்டில் எதிர்பார்த்த வளர்ச்சி கிட்டியது. பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. நாம் பணத்தை தேடிக்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம்.
அடுத்த வருடத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மேலும் அதிகரிக்கவுள்ளோம்.
வீதியோரங்களில் மூடிக்கிடந்த கடைகளை திறக்க வழி செய்திருக்கிறேன். இவை தற்காலிகமான தீர்வுகள் தான். தற்போதிருக்கும் நிலைபேற்றுத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
நாம் தொடர்ந்தும் கடன் பெறும் நாடாகவே இருக்க முடியாது. எனவே ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு சென்று வருமானத்தை அதிகரிக்க வேண்டும். புதிதாக சிந்தித்து முன்னேற வேண்டும்.
இன்று நான் ஜனாதிபதியாக இருப்பதால் இந்த தேர்தலில் இனவாதமோ, மதவாதமோ பேசப்படவில்லை.
மாறாக பொருளாதாரம் பற்றி பேசப்படுகிறது. முஸ்லிம் மக்களின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு தந்திருக்கிறேன்.
நல்லடக்கம் செய்யும் உரிமையை சட்டத்தினால் உறுதி செய்திருக்கிறேன்.
முன்னெடுக்கவேண்டிய ஏனைய பணிகளையும் செய்து முடிப்பேன். நான் ஒருபோதும் தேர்தலை இலக்கு வைத்து பேசுவதில்லை.
முஸ்லிம்கள் வர்த்தகம், விவசாயம் செய்கிறார்கள். அவை இரண்டும் இல்லாவிட்டால் முஸ்லிம் சமூகம் வீழ்ச்சியடையும்.
எனவே அவை இரண்டையும் வளப்படுத்தக்கூடியவர் யார் என்பதை முஸ்லிம் காங்கிரஸிடம் கேளுங்கள்.
இன்று வாழ்க்கை சுமை அதிகம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அடுத்த வருடம் வாழ்கை சுமையை குறைப்பதற்கான வழிகளை செய்வேன்.
இன்று வாழ்க்கைச் சுமை அதிகம் என்று சொல்லும் அனுரவும் சஜித்தும் அன்று ஏன் ஓடிப்போனார்கள்.
அவர்களிடம் மீண்டும் நாட்டையும் பொருளாதாரத்தையும் வழங்க முடியுமா? வருகின்ற வழியில் ஒரு கடையைக் கண்டேன்.
அங்கு தடகள போட்டிகளுக்கான நல்ல சப்பாத்துக்கள் உள்ளன. அவற்றை எதிர்கட்சியினருக்கு வாங்கிக் கொடுங்கள்.
நான் இப்பகுதியில் விவசாயத்தை மேம்படுத்த எதிர்பார்க்கிறேன். அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். புதிய அரிசி ஆலையை அமைக்க வேண்டும்.
அரசாங்கம் விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்யும். கடந்த போகங்களில் மக்களுக்கு பணம் கிடைத்தது.
அடுத்த சிறுபோகத்திலும் நல்ல வருமானம் கிடைக்கும். நான் உலக வங்கியுடனும் சமந்தா பவருடனும் பேசியே மக்களுக்கு தேவையான உரத்தை பெற்றுத் தந்தேன்.
அன்று சஜித்தும் முஸ்லிம் காங்கிரஸூம் அதற்காக முன்வரவில்லை.
எனவே இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வழி செய்வேன்.
ஹிங்குரங்கொட, மத்தளை விமான நிலையங்களை மேலும் பலப்படுத்துவோம். வர்த்தக முதலீட்டு வலயங்களை உருவாக்குவோம்.
திருகோணமலையை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வோம். டிஜிட்டல் பொருளாரத்தை உருவாக்குவேன்.
சூரிய சக்தி திட்டம் உருவாக்கப்படும். மீன்பிடித்துறை வளர்ச்சிக்காக துறைமுகம் பலப்படுத்தப்படும் அதற்காகவே மக்கள் ஆணை கோருகிறேன்.
மற்றையவர்கள் அதனை செய்யப்போவதில்லை. சஜித் போகும் இடங்களில் எல்லாம் எல்லாவற்றையும் இலவசமாக தருவதாக வாக்குறுதி அளிக்கிறார்.
மக்களுக்கு தலைவலியையும் இலவசமாக அவர் தருவார். தேவைப்படும் பட்சத்தில் அவரிடம் கேட்டு வாங்கிக்கொள்ள முடியும்.
அன்று பயந்தோடியவர்கள் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இன்று மீண்டும் வந்திருக்கிறார்கள்.
நான் மக்களின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்தேன். அதனாலேயே எனது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
எனவே உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிலிண்டர் சின்னத்து வாக்களியுங்கள்.
இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது எதிர்காலமும் சிறக்காது ” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.