திரை விமர்சனம்: ஏஆர்எம்

கிராமம் ஒன்றில் எலெக்ட்ரீஷியனாக இருக்கிறார், அஜயன் (டோவினோ தாமஸ்). ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அவரையும் அவர் அம்மாவையும் (ரோகிணி), மரியாதையின்றி நடத்துகிறது ஊர். தாத்தா திருடன் என்பதால் நேர்மையாக வாழ ஆசைப்படும் அஜயனையும் திருடனாகவே பார்க்கிறார்கள். அஜயனுக்கு உள்ளூர் பெரிய மனிதர் மகள் லக்‌ஷ்மி (கீர்த்தி ஷெட்டி) மீது காதல்.

இதற்கிடையே அந்த ஊருக்கு வரும் சுதேவ் (ஹரீஷ் உத்தமன்), உள்ளூர் கோயிலில் இருக்கும் விலை மதிப்பில்லாத விளக்கு போலி என்றும் உண்மையான விளக்கை உன்னால்தான் கண்டுபிடித்துத் தரமுடியும் என்றும் மிரட்டுகிறார், அஜயனை. அதை மீட்டுத்தந்தால் காதலைச் சேர்த்து வைப்பதாகவும் திருட்டுக் குடும்பம் என்கிற அவச்சொல்லில் இருந்து குடும்பத்தை மீட்பதாக வும் சொல்கிறார். அஜயன் அந்த விளக்கை மீட்டாரா? விளக்குக்கும் அஜயனுக்கும் என்ன தொடர்பு? விலைமதிப்பில்லாத விளக்கின் பின்னணி என்ன என்பது ஏஆர்எம் (அஜயன்டே ரண்டாம் மோஷனம்) படத்தின் கதை.

மலையாளத்தில் உருவான பான் இந்தியா படமான இது, தமிழிலும் அதே பெயரில் வெளியாகி இருக்கிறது. மன்னர் காலத்தில் தொடங்கும் கதையை, 3 காலகட்டங்களில் நடப்பது போல ஆக்‌ஷன் அட்வென்சராக எழுதி இருக்கிறார் கதாசிரியர், சுஜித் நம்பியார். மூன்று அடுக்குகளைக் கொண்ட கதையில், பூமியில் விழும் விண்கல்லில் இருந்து உருவாக்கப்படும் விளக்கால் ஊருக்கு நன்மைகள் ஏற்படுவது, வீரன் குஞ்சிவீரன், அந்த விளக்கைத் தனது ஊருக்கு கேட்பது எனத் தொடங்கும் ஆரம்ப காட்சிகளில் சுஜித்தும் இயக்குநர் ஜிதின் லாலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

படம் முழுவதும் அவர்கள் கொட்டியிருக்கும் உழைப்பும் ஆச்சரியப்படுத்துகின்றன. கற்பனை, சாகசம், ஆக் ஷன் ஆகியவற்றைச் சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கும் படக்குழுவைப் பாராட்டலாம். ஆனால், கவனமாகவும் சுவாரஸ்யமாகவும் சென்றிருக்க வேண்டிய திரைக்கதையில் அழுத்தம் இல்லாததால் ஆரம்ப எதிர்பார்ப்பு பிறகு வற்றிவிடுகிறது.

கதைப்படி நாயகனுக்கு முக்கியத்துவம் தேவைதான் என்றாலும் அதற்காக நெகட்டிவ் கதாபாத்திரத்தை வலுவின்றி சப்பென்று வடிவமைத்திருப்பது ஏமாற்றம். அஜயன் சொன்னதும் அவர் நண்பன், தான் திருடிய நகைகளை மீண்டும் கொண்டு கொடுப்பது போன்ற காட்சிகள் நாடக உணர்வைத் தருகின்றன. டோவினோ தாமஸ் மூன்று வேடங்களில் அசத்தலான நடிப்பையும் உழைப்பையும் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு கேரக்டருக்கும் வித்தியாசம் காட்டியிருந்தாலும் திருடனாக வரும் மணியன் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பு, சிறப்பு. கிளைமாக்ஸுக்கு முந்தைய களரிச் சண்டையில் அத்தனை யதார்த்தம்.

கீர்த்தி ஷெட்டி, சுரபி லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ் என 3 நாயகிகள் இருந்தாலும் அதிக வேலையில்லை. நண்பன் பசில் ஜோசப், அம்மா ரோகிணி, பாட்டி மாலாபார்வதி என துணை கதாபாத்திரங்கள்,கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். ஜோமோன் டி ஜானின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு காலகட்டத்தையும் காட்சிகளின் பிரம்மாண்டத்தையும் உணர வைக்கிறது. திபு நிணன் தாமஸின் பின்னணி இசை, சில இடங்களில் வசனங்களை மீறிய இரைச்சலைத் தருகிறது. காட்சிகளை நம்ப வைக்கும் அட்டகாசமான கலை இயக்கமும் விஎஃப்எக்ஸ் காட்சிகளும் படத்துக்குப் பலமாக இருக்கின்றன. இருந்தும் சுவாரஸ்யதிரைக்கதை அமைந்திருந்தால் சிறந்த அட்வென்சர் படமாக மாறியிருக்கும்.

Related posts