ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டொலர் பரிசு

அமெரிக்க (us)ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரசார களம் சூடு பிடித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (elon musk) வெளிப்படையாகவே டொனால்ட் ட்ரம்பை (donald trump) ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ட்ரம்பின் பிரசாரத்துக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியதோடு மட்டும் நில்லாமல் களத்தில் இறங்கி பிரசாரம் செய்து வருகிறார்.

தினமும் ஒரு மில்லியன் டொலர் பரிசு
இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டொலர் பரிசு அளிக்கப் போவதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்புக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை எலான் மஸ்க் தொடங்கி வைத்தார். மேலும், இந்த கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்து இடுபவர்களில் தினமும் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு ஒரு மில்லியன் டொலர் பரிசு வழங்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

அதன்படி முதல் அதிஷ்டசாலியாக பென்சில்வேனியாவை சேர்ந்த ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த திட்டத்துக்கு ஜனநாயகவாதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் வரை தினமும் ஒரு ட்ரம்ப் ஆதரவாளருக்கு ஒரு மில்லியன் டொலர் பரிசு வழங்கப் போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts