கங்குவா படத்துக்கு தடை கோரி குவியும் வழக்குகள்

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரி்த்துள்ளது. நாளை (நவ.14) வெளியாகும் இந்தப் படத்துக்கு தடை கோரி ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில், ரூ.99 கோடி கடனாக கொடுத்த நிலையில் ரூ.54 கோடி பாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. உயர் நீதி்மன்ற உத்தரவுப்படி அந்நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.54 கோடியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் இறந்து விட்டதால் அவருடைய சொத்துக்களை சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார். அதன்படி அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் பங்குதாரர்களான ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் கடந்த 2013-ம் ஆண்டு ரூ.10.35 கோடி கடன் வாங்கிய நிலையில், அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்த சொத்தாட்சியர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி அந்த தொகையை திருப்பி செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை.

இதையடுத்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்கக்கோரியும், ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள ‘கங்குவா’ படத்தை வெளியிட தடை கோரியும் சொத்தாட்சியர் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது சொத்தாட்சியர் தரப்பில், ‘‘கங்குவா படத்தை வெளியிடும் முன்பாக ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என பிறப்பித்த உத்தரவை ஞானவேல்ராஜா மதித்து நடக்கவில்லை. தங்களிடம் பணம் இல்லை எனக்கூறும் ஞானவேல்ராஜா, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.100 கோடி கடன் தொகையை மட்டும் முழுமையாக செலுத்திவிட்டார்” என குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ரூ.20 கோடியை சொத்தாட்சியரிடம் நவ.13-ம் (இன்று) தேதிக்குள் செலுத்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர். இந்த தொகையை செலுத்தாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என்றும் தடை விதித்துள்ளனர்.

இதேபோல ப்யூல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.11 கோடியை வழங்காமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டூடியோ கிரீன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், அந்நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய அசல் தொகையான ரூ.1.60 கோடியை வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதையேற்ற நீதிபதி, அந்த தொகையை நவ.13-ம் தேதிக்குள் (இன்று) உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

நாளை வெளியாகயுள்ள நிலையில் ‘கங்குவா’ படத்துக்கு எதிராகக் குவியும் வழக்குகளால் அப்படத்தை தயாரி்த்துள்ள ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் நீதிமன்றப் படியேறி வருகிறது.

Related posts