யாழ் மாவட்டத்திற்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும், யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
வாக்குப் பெட்டியை ஏற்றியவாறு முதலாவது பேருந்து இன்று புதன்கிழமை (13) காலை 8.30 மணிக்கு புறப்பட்டது.
இதன்போது, யாழ். தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
———
பொதுத்தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு நிமித்தம் பொலிஸார் உட்பட முப்படையினர் உள்ளடங்களாக சுமார் 90 ஆயிரம் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.
தேர்தல் மற்றும் பொதுச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாக்களிப்பு முடிவடைந்த பின்னரும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செயற்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுத்தேர்தல் குறித்து தெளிவுப்படுத்துகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட காலத்தில் இருந்து நேற்று வரை தேர்தலுடன் தொடர்புடைய பாரதூரமான சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை. கடந்த காலங்களை காட்டிலும் இம்முறை சுமுகமான தன்மையே காணப்படுகிறது.
தேர்தலுடன் தொடர்புடையதாக பொலிஸ் நிலையங்களுக்கு 496 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இக்காலப்பகுதியில் மாத்திரம் 478 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த எண்ணிக்கையில் 14 வேட்பாளர்கள் அடங்குகின்றனர். அத்துடன் 116 வாகனங்கள் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சட்டவிரோதமானது. விசேட தேவையுடையவர்கள், வயதுமுதிர்ந்தோர் ஆகியோருக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குதாயின் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திடம் முன்கூட்டியதாகவே அனுமதி பெற வேண்டும்.
தேர்தல் பணிகளின் நிமித்தம் 63,145 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் நேரடியாக கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் 3200 விசேட அதிரடி படையினரும், 6000 இணை சேவை உத்தியோகஸ்த்தர்களும்,11 ஆயிரம் முப்படையினரும், 12227 சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
3109 நடமாடும் சேவைகளும், வாகன சோதனைகளுக்காக 269 வீதி தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 1591 தற்காலிக தொழிலாளர்கள் கடமைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கடமைகளுக்காக 4525 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
பொதுத்தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு நிமித்தம் பொலிஸார் உட்பட முப்படையினர் உள்ளடங்களாக சுமார் 90 ஆயிரம் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.
தேர்தல் மற்றும் பொதுச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாக்களிப்பு முடிவடைந்த பின்னரும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செயற்படுத்தப்படும் என்றார்.
———
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கிளிநொச்சியில் ஒரு லட்சத்து 907 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் .
வாக்காளர்கள் வாக்களிக்க செல்வதற்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தீவக பகுதிகளுக்கு செல்வதற்கு குறிகட்டுவான் பகுதியில் இருந்து விசேட படகு சேவைகள் இடம்பெறும்.
யாழ்ப்பாணத்தில் ஒரு வன்முறை சம்பவமும் 62 சட்ட மீறல்களும் பதிவாகியுள்ளன. அது தொடர்பிலான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாக்களிப்பு வியாழக்கிழமை காலை 7 மணியில் இருந்து மாலை 4 வரையில் வாக்களிக்க முடியும். வாக்கெண்ணும் நடவடிக்கைகள் யாழ் மத்திய கல்லூரியில் இரவு ஆரம்பிக்கப்படும்.
அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
———-
வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்க முடியும். வாக்களிப்பு மத்திய நிலையத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவே வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது.
ஆகவே வாக்காளர் அட்டை உள்ளவர்கள் வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டையை கொண்டு செல்ல வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆளடையாள அட்டை இல்லாவிடின் வாக்குச்சீட்டு வழங்கப்படமாட்டாது.
அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாதவர்கள் தமது வதிவிட கிராம சேவகரை நாடி தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் நாளைய தினத்துக்குள் தேருநர் இடாப்பில் தாம் பதிவு செய்துள்ள முகவரிக்குரிய பிரதேச தபால் நிலையத்துக்கு சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி தமக்குரிய வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோல் நிகழ்நிலை முறைமை ஊடாக வாக்காளர் அட்டையின் பிரதியை பெற்றுக்கொள்ளும் வசதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய https://eservices.elections.gov.lk என்ற தேர்தல் இ-சேவை இணையத்தளத்துக்குள் பிரவேசித்து அதிலுள்ள குடிமக்களுக்கு என்ற பகுதியில் இருக்கும் தேருநர் பதிவு விபரம் தேடல் என்ற இ- சேவையினுள் பிரவேசிக்க வேண்டும்.
தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை உள்ளிட்டு தகவல்களை ஆராய வேண்டும். அதன் துணையுடன் கிடைக்கின்ற தகவல்களில் தேர்தல் நடவடிக்கைகளுக்கான தேருநர் பதிவு விபரம் – பாராளுமன்றத் தேர்தல் 2024 என்பதனுள் பிரவேசித்தல் வேண்டும்.
2024 பாராளுமன்றத் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் இடாப்பில் தமது தேருநர் இடாப்பு பதிவு தகவல்களை பார்வையிட முடியும்.
அதன் பிறகு தமது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு வாக்காளர் அட்டை அச்சிடு என்பதன் மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பதிவிறக்க முடியும்.
அத்துடன் தமது கையடக்கத் தொலைப்பேசிக்கு குறியீடு (OPT ) ஒன்று கிடைக்கப்பெறும் ” Enter the code ” என்று தோன்றும் இடத்தில் அக்குறியீட்டை உள்ளிட்டு தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.
வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இருப்பது கட்டாயமானதல்ல, 2024 தேருநர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள செல்லுபடியான அடையாள அட்டையொன்றை வைத்துள்ள வாக்காளர் எவரும் தமக்கு குறித்தொதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும்.
வாக்களிப்பு மத்திய நிலையத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தடுப்பதற்காகவே வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது.
ஆகவே வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெற்றுள்ளவர்கள் வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டையை கொண்டு செல்வது வாக்காளர்களுக்கும்; வாக்களிப்பு மத்திய நிலைய உத்தியோகஸ்த்தர்களுக்கும் இலகுவானதாக இருக்கும்.
———
நாளை 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் கண்காணிப்புக்கென 20 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினர் இதற்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் மேலதிகமாக 18 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரஷ்யா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் கண்காணிப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களைச் சந்தித்த பின்னர் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஆரம்பிப்பார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
——-
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வன்னி தேர்தல் தொகுதியில் 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 137 வாக்களிப்பு நிலையங்களிற்கே இவ் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
23 கட்சிகளும், 25 சுயேட்சை குழுக்களுமாக மொத்தமாக இம்முறை வன்னி தேர்தல் தொகுதியில் 432 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து இன்று புதன்கிழமை (13) காலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தேர்தலில் 1653 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 500 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.