“இந்த பிரபஞ்சத்தையும், மனிதர்களையும் கடவுள் படைத்தது உண்மையாக இருந்தால் மனிதர்களிடம் கடவுள் பாகுபாடு பார்க்க கூடாது. அப்படி பார்ப்பவர் கடவுளாகவே இருக்க முடியாது. அதை இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என எந்த மதம் சொன்னாலும் தவறு தவறு தான்” என இளையராஜா விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘கூரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமீர், “இளையராஜாவுக்கு கோயில் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தான் நான் கருத்தை பதிவு செய்தேன். நான் ஒரு இறை நம்பிக்கையாளன்.
எனக்கு ஒரு பொதுகருத்து உண்டு. இந்த பிரபஞ்சத்தையும், மனிதர்களையும் கடவுள் படைத்தது உண்மையாக இருந்தால் மனிதர்களிடம் கடவுள் பாகுபாடு பார்க்க கூடாது.
அப்படி பார்ப்பவர் கடவுளாகவே இருக்க முடியாது. அதை இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் என எந்த மதம் சொன்னாலும் தவறு தவறு தான். இந்த அடிப்படை கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த அடிப்படையில் என்னுடைய கருத்தை நான் பதிவு செய்தேன். ஆனால், நடந்த சம்பவத்தை இளையராஜாவே மறுத்த நிலையில், அது குறித்து நாம் விவாதிப்பதில் அர்த்தமில்லை” என்றார்.
மேலும், “அரசியலில் தரம் தாழ்ந்த பேச்சுக்கள் கூடாது. விஜய் உள்பட யாரையும் ஆபாசமாக பேசுவது தவறு. விஜய்யின் செயல்பாடுகளை வைத்து தான் அவரது வாக்கு வங்கி குறித்து தெரியவரும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் விஜய்யின் நிலைபாடு என்ன? டங்ஸ்டன் விவகாரத்தில் அவரது நிலைபாடு என்ன என்பதை மக்கள் பார்ப்பார்கள். அதை பொறுத்து தான் மக்கள் முடிவெடுப்பார்கள்” என்றார்.