தொடர்ந்து தவறான படங்களை ஆஸ்கருக்கு அனுப்புவதா?

இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்ட ‘லாபதா லேடீஸ்’ படம், போட்டியில் இருந்து வெளியேறியது. சர்வதேச அளவில் திரைப்படத்துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். இதில் ‘சிறந்த சர்வதேச திரைப்படம்’ என்ற பிரிவுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து படங்கள் அனுப்பப்படுவது வழக்கம். இந்தியாவில் இருந்து ஒவ்வொரு வருடமும் அதிகாரப்பூர்வமாக ஒரு படம் அனுப்பப்பட்டு வருகிறது. 97-வது ஆஸ்கர் விருதுக்கு ‘லாபதா லேடீஸ்’ என்ற இந்திப் படத்தை, இந்திய திரைப்படக் கூட்டமைப்பு தேர்வு செய்தது. இதை கிரண் ராவ் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் ஆஸ்கர் விருதின், சிறந்த சர்வதேசப்பட பிரிவின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ‘லாபதா லேடீஸ்’ இடம் பெறவில்லை. நுழைவுப் பட்டியலில் இருந்து அந்தப் படம் வெளியேறியது. இருந்தாலும் இங்கிலாந்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள ‘சந்தோஷ்’ என்ற இந்தி திரைப்படம், ஆஸ்கரின் சிறந்த சர்வதேச திரைப்படப்பிரிவில் இடம் பிடித்துள்ளது. சந்தியா சூரி இயக்கியுள்ள இந்தப் படம் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

‘லாபதா லேடீஸ்’ ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து வெளியேறியதை அடுத்து, தவறான படத்தைத் தொடர்ந்து தேர்வு செய்து ஆஸ்கருக்கு அனுப்பி வருவதாக, இந்திய திரைப்படக் கூட்டமைப்பை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

‘லாபதா லேடீஸ்’ படத்தை ஆஸ்கருக்கு அனுப்பத் தேர்வு செய்தபோது, திரை விமர்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். சமூக வலைதளங்களிலும் விமர்சனம் எழுந்தது. கேன்ஸ் பட விழாவில் விருது பெற்ற பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ என்ற படத்தை அனுப்பியிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

Related posts