வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு இசை அமைக்க இருக்கிறார்.
இது அவருக்கு இசை அமைப்பாளராக 100-வது படம். இதையடுத்து அவர் நன்றிதெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது: 2005-ம் ஆண்டில் தொடங்கியது எனது இசைப் பயணம். 2024-ம் ஆண்டில் 100-வது திரைப் படத்துக்கு இசை அமைக்கும் நல்ல வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
‘சூரரைப் போற்று’ மூலம் தேசிய விருது வெல்ல காரணமாக இருந்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படம் மூலம் 100-வது எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறேன்.
19 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், பாடகர்கள், பாடகிகள், பாடலாசிரியர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.
தொடர்ந்து படங்களுக்கு இசை அமைப்பதிலும் நடிப்பதிலும் பாடுவதிலும் கடுமையாக உழைக்கத் திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.