“படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் 8 நிமிட காட்சிகளை குறைத்துள்ளோம். கடினமான உழைப்பை செலுத்தியுள்ளோம்.
படம் எப்படி உள்ளது என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்” என இயக்குநர் வெற்றிமாறன் ‘விடுதலை 2’ குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், “விடுதலை 2’ படத்துக்கான வேலைகள் இப்போது தான் முடிந்தன. மீக நீண்ட சோர்வளிக்கும் வேலை இது.
படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் 8 நிமிட காட்சிகளை குறைத்துள்ளோம்.
படத்தில் வேலை செய்த அனைவருக்கும் இது மிகப்பெரிய கல்வி. இந்த பயணமே மிகப் பெரிய பயணம்.
இந்த பயணத்தில் இருந்த எல்லாருடைய பங்களிப்பும்தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறது.
இந்தப் படத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எங்கள் குழு சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு படமாக இப்படம் எப்படி உள்ளது என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்.
இந்தப் படத்துக்காக கடினமாக உழைத்திருக்கிறோம். அனுபவமாக நிறைய கற்றுக் கொண்டோம்” என்றார்.
அதன்படி படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 45 நிமிடம் என கூறப்படுகிறது.
மேலும் படத்துக்கு வயது வந்தோர் பார்க்கும் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.