முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என பங்களாதேஷ் இடைக்கால அரசு இந்தியாவுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.
பங்களாதேஷில்ஷேக் ஹசீனா (77) தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்தார். இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனால் ஹசீனா அரசு கவிழ்ந்ததையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. . இந்தச் சூழ்நிலையில் டாக்காவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச குற்ற தீர்ப்பாயம் (ஐசிடி) ஹசீனா முன்னாள் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இடைக்கால அரசின் வெளியுறவுத் துறை ஆலோசகர் டோஹி ஹுசைன் செய்தியாளர்களிடம் கூறும்போது “ஷேக் ஹசீனா மீதான நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவரை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய அரசுக்கு தூதரக ரீதியாக கடிதம் எழுதி உள்ளோம்” என்றார்.
இதுபோல வங்கதேச உள் துறை ஆலோசகர் ஜஹாங்கிர் ஆலம் செய்தியாளர்களிடம் கூறும்போது “ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளோம். இந்தியா வங்கதேசம் இடையே குற்றவாளிகளை பரஸ்பரம் நாடு கடத்துவது தொடர்பான ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இதன்படி ஹசீனாவை வங்கதேசத்துக்கு அழைத்து வருவோம்” என்றார்.