தணிக்கை நடைமுறைப் பணிகளும் முடிந்துவிட்டது. ஆனால், அஜித்தின் ‘விடாமுயற்சி’ எப்போது வெளியீடு என்பது இன்னும் முடிவாகாமல் இருக்கிறது.
ஜனவரி 10-ம் தேதி வெளியாக இருந்த படம் ‘விடாமுயற்சி’. ஹாலிவுட் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சையில் சிக்கியது. அந்நிறுவனத்துக்கும் லைகாவுக்கு இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாக தொடங்கினாலும், லைகா நிறுவனம் நினைப்பது மாதிரி முடிவு எட்டப்படவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு இடையே டீஸர், ட்ரெய்லர், ப்ரோமோக்கள் என அனைத்தையும் தணிக்கை செய்தது லைகா நிறுவனம். தற்போது படத்தினையும் தணிக்கை செய்துவிட்டது. யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. 150 நிமிடங்கள், 46 விநாடிகள் ஓடக் கூடிய படமாக ‘விடாமுயற்சி’ இருப்பது தணிக்கை சான்றிதழ் மூலம் தெரியவந்துள்ளது.
‘விடாமுயற்சி’ எப்போது வெளியாகும் என்று லைகா தரப்பில் விசாரித்தபோது, ”ஹாலிவுட் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை முடிந்தால் மட்டுமே படம் வெளியீடு சாத்தியமாகும். எப்போது முடியும் என்பது யாருக்குமே தெரியாது. ஹாலிவுட் நிறுவனத்தின் இ-மெயிலுக்காக காத்திருக்கிறார்கள். இப்பேச்சுவார்த்தை முடிந்துவிட்டால் இரண்டு வாரத்தில் வெளியிட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் லைகா நிறுவனம் இருக்கிறது” என்று தெரிவித்தார்கள்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், ரெஜினா, த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.