வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிக்கவிருப்பது உறுதியாகிவிட்டது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ என வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி இணைந்த அத்தனை படங்களுமே பெரும் வரவேற்பைப் பெற்றவை.
தற்போது மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. இப்படத்தினை எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளார்.
‘விடுதலை 2’ படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், ‘விடுதலை’ படக்குழுவினர், ரெட் ஜெயன்ட் மூவிஸ், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆர்.எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த 2 படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
“இயக்குநர் வெற்றிமாறனின் 7வது படமான ‘விடுதலை பாகம் 2’ வெற்றிக்குப் பிறகு, அவர் இயக்கும் 9-வது படத்தில் தனுஷுடன் இணைவதில் ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சியடைகிறது.
தொடர் வெற்றிப் படங்களை வழங்கிய இந்த கூட்டணி மீண்டும் இணைந்து, புதிய சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கிறது. மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
விடுதலை’யின் வெற்றிக்குப் பிறகு, ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியுடன் மீண்டும் இணைகிறது.
‘விடுதலை’ வெற்றிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்த இயக்குநர் வெற்றிமாறன் குழுவின் முக்கிய உறுப்பினரான மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது” என்று ஆர்.எஸ் இன்போடைன்மெண்ட் தெரிவித்துள்ளது.