ஜெயிலர் 2’ படத்தின் ப்ரொமோ வீடியோ எப்படி?

‘கூலி’ படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரொமோ வீடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வழக்கம்போல், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் அறிமுகம் செய்யும் அவர்களது புதிய படங்களுக்கான அறிவிப்பு போன்றே ‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரொமோ வீடியோவும் வெளிவந்துள்ளது.

இருவரும் ஃபெஞ்சல் புயல் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த அறைக்குள் நடக்கும் துப்பாக்கிச் சூடு ஆக்‌ஷன்களுக்குப் பிறகு அறைக்குள் நுழைகிறார் ரஜினி.

பின்னர், இருவரையும் பார்த்து சைகையில் ஏதோ கேட்டுவிட்டு வெளியே செல்ல, அந்த இடத்தில் ரஜினி வீசிவிட்டுச் செல்லும் கையெறி குண்டால் புகைமண்டலமாகிறது அந்த அறை.

அதன்பின் சுவரை உடைத்துக் கொண்டு துப்பாக்கி ஏந்தியபடி வருபவர்களை ரஜினிக்கே உரிய ஸ்டைலில் டீல் செய்து வழியனுப்பும் வகையில் அந்த ப்ரொமோ வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

‘ஜெயிலர் 1’ படத்தை போலவே, இரண்டாம் பாகத்திலும் ஆக்‌ஷன் காட்சிகள் அனல் பறக்கும் என்பது உறுதியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த ப்ரொமோ வீடியோ வெளியாகி உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்துக்கான கதையினை உருவாக்கி வந்தார் நெல்சன். தற்போது அதன் பணிகள் முடிவடைந்து மார்ச் மாதத்தில் இருந்து படப்பிடிப்புக்கு செல்லலாம் என முடிவு எடுத்துள்ளார்கள்.

தமிழ்நாடு, கேரளா, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணிபுரியவுள்ளார்கள்.

‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

Related posts