விஜய் சேதுபதியின் 50-வது படம் ‘மகாராஜா’. இதை நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார்.
கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்தது.
ஓடிடியிலும் வெளியாகி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தப் படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த நவம்பர் மாதம் அங்கு வெளியானது.
அங்குள்ள ரசிகர்களையும் கவர்ந்த மகாராஜா, 2018-ம் வருடத்துக்குப் பிறகு அதிக வசூலை ஈட்டிய இந்தியப் படமாக மாறியிருக்கிறது. ரூ.91.55 கோடியை இந்தப் படம் சீனாவில் வசூலித்துள்ளது.
இந்த நிலையில் நிகழ்வு ஒன்றில் பேசிய நித்திலன் சாமிநாதன், “சமீபத்தில் மும்பையில் அனுராக் காஷ்யப் மகள் திருமணத்தில் அவரை சந்தித்தேன்.
அப்போது அவர் என்னிடம் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் அலெஜாண்ட்ரோ இனார்ரிட்டு தன்னை அவர் படத்தில் நடிக்க அழைத்துள்ளதாகவும் அதற்கு காரணம் ‘மகாராஜா’ படம்தான் என்றும் கூறினார்.
இதை கேட்டு எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
‘அமோரஸ் பெர்ரோஸ்’, ‘பேர்ட்மேன்’, ‘தி ரெவெனென்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அலெஜாண்ட்ரோ இனார்ரிட்டு.
இவரது படங்கள் இதுவரை 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன. ‘பேர்ட்மேன்’ படத்துக்காக இவருக்கு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் வழங்கப்பட்டது.