பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன்.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மோசடியாளர்கள் இன்று திணறுகிறார்கள், போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
களுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் அரசாங்கத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய வாகனங்களை எதிர்வரும் மாதத்துக்கு பின்னர் ஏலத்துக்கு விடுவேன்.
அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த நிதியை திறைச்சேரிக்கு அனுப்புமாறு உரிய அமைச்சுகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மோசடியாளர்கள் தற்போது திணறுகிறார்கள். தமக்கு இணக்கமான ஊடகங்களில் புலம்புகிறார்கள்.
இவர்கள் இன்னும் 2 தசாப்தங்கள் அழ வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன்.
பாராளுமன்றத்துக்கு உணவு பொதியுடன் வருமாறு குறிப்பிடவில்லை. பாராளுமன்றத்தில் உணவு பெறுவதாயின் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ஒரு வேளை உணவுக்கு 2000 ரூபாய் செலவாகுமாயின் உறுப்பினர்கள் 2000 ரூபாவை செலுத்த வேண்டும் இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சிற்றுண்டிச்சாலை திறந்திருக்கும் கட்டணத்தை செலுத்தி உணவை பெற முடியும். பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட மாட்டாது.
இந்த மாற்றத்தையே மக்கள் எதிர்பார்த்தார்கள்.
பொருளாதார ரீதியில் பலமடைந்த நாட்டை நாங்கள் பொறுப்பேற்கவில்லை. வங்குரோத்து நிலையடைந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம்.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று செல்வந்த நாட்டை எங்களிடம் ஒப்படைத்ததை போன்று பேசுகிறார்கள். இந்த நாட்டை மீண்டும் வங்குரோத்து நிலையடைவதற்கு இடமளிக்க போவதில்லை என்றார்.