தேவயானி இயக்கியுள்ள கைக்குட்டை ராணிக்கு விருது!

நடிகை தேவயானி முதன்முறையாகத் தயாரித்து, இயக்கியுள்ள குறும்படம், ‘கைக்குட்டை ராணி’. இதற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவு செய்துள்ள இக்குறும்படத்துக்கு பி.லெனின் படத்தொகுப்பு செய்துள்ளார்.

நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன்.என் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

20 நிமிடங்கள் ஓடும் இக்குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளைப் பேசுகிறது.

தாயை இழந்த ஒரு பெண் குழந்தை, தந்தை வெளியூரில் பணிபுரியும் சூழலில் எத்தகைய சிக்கல்களைச் சந்திக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்துகிறது.

இக்குறும்படம், 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்துக்கான விருதை வென்றுள்ளது.

இதுகுறித்து தேவயானி கூறும்போது, “எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் முதன்முறையாக நான் இயக்கிய குறும்படம் விருது பெறுவது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. மேலும் பல சர்வதேச பட விழாக்களுக்கு இதைக் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

Related posts