விஜய்யின் ‘கோட்’ படத்தின் வசூல் குறித்த கேள்விக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெளிவாக பதிலளித்திருக்கிறார்.
‘டிராகன்’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டியொன்று அளித்துள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.
அந்தப் பேட்டியில் விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தின் வசூல் நிலவரங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
அதில் அர்ச்சனா கல்பாத்தி “450 கோடி வசூல் என்று போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் திரையரங்கைத் தாண்டி உள்ள வியாபாரம் எதுவும் சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் பெரிதாக இருக்கும்.
நாங்கள் என்ன வசூல் என்று சொன்னோமோ அது திரையரங்க மொத்த வசூல் மட்டுமே.
அதிலிருந்து வரியை எல்லாம் கழித்து கணக்கிட வேண்டும்.
பெரிய படங்களுக்கு வெளியீட்டுக்கு முன்பே திரையரங்க வசூலைத் தாண்டிய அனைத்து வியாபாரமும் பெரிய உறுதுணையாக இருக்கும்.
அதிலிருந்தே பெருவாரியான பணத்தை எடுத்துவிட முடியும்.
திரையரங்க வசூலில் இருந்து வரும் பெரும்பாலான தொகை லாபமாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் ‘கோட்’.
இதில் விஜய், மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
யுவன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். இப்படம் தமிழகத்தில் மட்டும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.