‘வடசென்னை 2’ படத்தில் மணிகண்டன் நடிக்கவிருப்பதாக வெளியான செய்தி வெறும் வதந்தி என்று தெரியவந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘வடசென்னை’.
இப்படத்தின் கதை இன்னும் முடியாமல் இருப்பதால், விரைவில் 2-ம் பாகம் உருவாகும் என கூறப்பட்டது.
இது குறித்து பல்வேறு பேட்டிகள், நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார் வெற்றிமாறன்.
தற்போது ‘வடசென்னை 2’ படத்தில் மணிகண்டன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனை வெற்றிமாறன் தயாரிக்க இருப்பதாகவும், அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கார்த்திகேயன் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தச் செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இது குறித்து விசாரித்த போது, ‘வடசென்னை 2’ இப்போதைக்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெரிவித்தார்கள்.
மேலும் வெற்றிமாறன் தயாரிப்பில் கார்த்திகேயன் இயக்கத்தில் மணிகண்டன் படமொன்றில் நடிக்கவுள்ளார்.
ஆனால், அது ‘வடசென்னை 2’ இல்லை என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.